காசா, ஏப். 12–
இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் 3 மகன்கள் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இப்போரில் 25,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதுவரை 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், பாலஸ்தீன தலைநகர் காசா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
தலைவரின் 3 குழந்தைகள் பலி
இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பு தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் குடும்பத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், அவரது 3 மகன்களும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் ஹனியே கூறியதாவது:–
‘காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எனது 3 மகன்கள் உயிரிழந்தனர். இந்த போரில் பழிவாங்கும் வெறியுடன் இஸ்ரேல் ராணுவம் செயல்படுகிறது. எனது மகன்கள் கொல்லப்பட்டதால் ஹமாஸ் அமைப்பின் உறுதி தளர்ந்து விடாது. காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்காக சர்வதேச நாடுகளின் முன்னிலையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையில் எங்களது நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வரமாட்டோம். இவ்வாறு ஹனியே தெரிவித்துள்ளார்.