சென்னை, ஜூன்.16-
இஸ்ரேல்–-ஈரான் மோதல் எதிரொலியாக இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கும். இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இஸ்ரேல்-–ஈரான் இடையே கடுமையான போர் சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த நாடுகளுக்கு இடையே புவியியல் ரீதியாக எல்லைகளை இந்தியா பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், அந்த நாடுகளின் மோதல் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த போர் நீடிக்கும் பட்சத்தில் இந்தியாவில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஹார்மூஸ் ஜலசந்திதான். இது ஈரான் மற்றும் ஒமன் இடையே அமைந்துள்ள ஒரு குறுகிய கடல்பாதை. இந்த பாதை, பாரசீக வளைகுடாவை ஓமன் மற்றும் அரபிய பெருங்கடல் பகுதிகளுடன் இணைக்கிறது. பனாமா கால்வாய் போல் இதுவும் கப்பல் போக்குவரத்தில் மிக முக்கியமானதாகும்.
உலக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதம் இந்த கடல் பாதை வழியாக செல்கிறது. அதாவது ஈரான் உள்பட அரபு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் தங்களது கப்பலை ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கொண்டு செல்கின்றன.
இந்தியா, சீனா, தாய்லாந்து, தென்கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகள் மட்டுமின்றி, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஆப்பிரிக்க நாடுகளும் இந்த பாதை வழியாகத்தான் எண்ணெயை தங்களது நாட்டுக்கு கொண்டு வருகின்றன. தினமும் குறைந்தது 45 எண்ணெய் கப்பல்களுக்கு மேல் அதில் செல்கின்றன.சுமார் 3 கிலோ மீட்டர் அகலம் கொண்ட இந்த ஹார்மூஸ் பாதையை இஸ்ரேல் தாக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் பொருளாதார ரீதியாக ஈரானையும், அதற்கு ஆதரவாக செயல்படும் சில நாடுகளையும் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையை இஸ்ரேல் எடுக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதாவது இந்த பாதை இயற்கையான ஒரு கடல் வழித்தடம். அதனை நிரந்தரமாக அழிக்க முடியாது. இருந்தாலும் ஹார்மூஸ் கடற்கரைகளில் உள்ள கண்காணிப்பு மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும்.
அதனால் அங்கு போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டு ஈரான், குவைத், பக்ரைன், கத்தார், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது. எனவேதான் இஸ்ரேல் அதன் மீது குறிவைத்து இருக்கிறது.
அதற்கிடையில் ஈரானும், இந்த பாதையை தற்காலிகமாக மூடுவதற்கும் மிக தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் இந்த பாதையை பயன்படுத்தும் நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்று ஈரான் விரும்புகிறது. இந்த கடல்பாதை தாக்குதலுக்கு உள்ளானாலோ, மூடப்பட்டாலோ கப்பல்கள் போக்குவரத்து அடியோடு நின்று விடும். இதனால் இந்தியாவிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.