துபாய், ஜூன்.27-
இஸ்ரேலுடன் நடந்த போரில் வெற்றி பெற்றதாக ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி முதல் முறையாக அறிவித்து உள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாடு மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. அதற்கு ஈரானும் தகுந்த பதிலடி கொடுத்தது.
இந்த மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் கடந்த 22-ந்தேதி ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து குண்டுகளை வீசியது. எனவே கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தை ஈரான் தாக்கியது.
எனினும் 12 நாட்களாக நடந்த இந்த மோதல் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையீட்டின்பேரில் கடந்த 24-ந்தேதி முடிவுக்கு வந்தது. ஈரானும், இஸ்ரேலும் சண்டை நிறுத்தம் செய்தன.
12 நாட்கள் நடந்த இந்த மோதலின்போது மறைவிடத்தில் பதுங்கி இருந்த ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி, தாக்குதல் முடிவுக்கு பிறகு நேற்று முதல் முறையாக அந்த நாட்டு தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார்.
அப்போது இஸ்ரேலுடனான போரில் தங்களுக்கு வெற்றி கிடைத்திருப்பதாக அவர் கூறினார்.
அவர் மேலும் கூறும்போது; ‘இந்த போரில் தலையிடாவிட்டால், இஸ்ரேலின் அரசு முற்றிலும் அழிக்கப்படும் என நினைத்து அமெரிக்கா தலையிட்டது. ஆனால் இந்த போரால் அமெரிக்காவும் எந்த பயனும் அடையவில்லை’ என்றும் தெரிவித்தார். ‘போரில் இஸ்லாமிய குடியரசு வெற்றி பெற்றதுடன், பதிலடியாக அமெரிக்காவின் முகத்தில் ஒரு அறையும் கொடுத்தது’ என்றும் காமெனி கூறினார்.
கடந்த 19-ந்தேதிக்குப்பின் காமெனி பொதுவெளியில் ேதான்றியது இதுவே முதல் முறையாகும்.
ஈரான் விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்
போரில் ஈரான் வெற்றி பெற்றதாக அந்த நாடு கூறியிருந்தாலும், 12 நாட்கள் நடந்த இந்த மோதலில் அந்த நாடு அதிக பாதிப்புகளை சந்தித்து இருப்பதாகவும், அவற்றை சீர் செய்ய ஆண்டுக்கணக்கில் ஆகும் எனவும் சர்வதேச நிபுணர்கள் கூறியுள்ளனர்.
குறிப்பாக இஸ்ரேலின் வான் தாக்குதலில் ஈரான் புரட்சிகர படையின் மூத்த தளபதிகள், அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். மேலும் நீண்ட தூர ஏவுகணை தொகுப்பும் சேதமடைந்தது.
அத்துடன் இஸ்ரேலின் ஏவுகணைகளும், அமெரிக்காவின் பஸ்டர் பங்கர் குண்டுகளும் ஈரானின் அணுசக்தி திட்டத்துக்கு பெருத்த சேதாரத்தை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச ஆதரவையும் இந்த போரில் ஈரானால் ஈட்ட முடியவில்ைல.
ஏற்கனவே நிலுவையில் உள்ள பல பிரச்சினைகள் குறிப்பாக, சர்வதேச பொருளாதார தடைகளால் சீரழிந்துள்ள பொருளாதாரம், ஊழல், தவறான நிர்வாகம் போன்றவற்றாலும் ஈரான் திணறி வருகிறது.
இத்தகைய சூழல்களால் மூச்சுத்திணறி வரும் ஈரானுக்கு இந்த போர் நிறுத்தம் சற்றே மூச்சு விட நேரம் அளித்து இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் நாட்டின் மறுகட்டமைப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பில் கவனம் செலுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
![]()





