செய்திகள்

இளையராஜாவை தடுத்து நிறுத்தியது ஏன்? ஆண்டாள் கோயில் நிர்வாகம் விளக்கம்

Makkal Kural Official

திருவில்லிப்புத்தூர், டிச. 16–

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்? என்று கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இளையராஜா இசையமைத்து வெளியான “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மாநிலங்களவை உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா வருகை தந்தார். அவரை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். கடவுளைத் தவிர மனிதர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் எந்த ஒரு மரியாதையும் அளித்து அழைத்து வரக்கூடாது என்று அரசு தெரிவித்துள்ள நிலையில், இளையராஜா மற்றும் ஆண்டாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் ஆகியோருக்கு மேள தாளங்கள் முழங்க கோயில் யானையை அழைத்து வந்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இளையராஜா தடுத்து நிறுத்தம்

இதைத் தொடர்ந்து இளையராஜா ஆண்டாள் ரெங்கமன்னாரை தரிசனம் செய்ய அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்றார். அப்போது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை அர்த்த மண்டபத்திற்கு வெளியே நிற்குமாறு கூறினர். அதைத் தொடர்ந்து அர்த்த மண்டப நுழைவு வாயிலில் வைத்து இளையராஜாவிற்கு மரியாதை அளித்தனர். அதன்பின் இளையராஜா வெளியே வந்து நின்று சாமி தரிசனம் செய்தார். மேலும் “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியையும் கண்டு ரசித்தார்.

இதற்கிடையே, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அர்த்தமண்டபத்திற்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜாவை வெளியே அனுப்பியதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இது தொடர்பாக கோயில் நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், ஆண்டாள் கோயிலில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தையும் கருவறை போன்றே பாவித்து வருவதாகத் தெரிவித்தனர். அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்களைத் தவிர பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் சம்பவத்தன்று ஜீயருடன் இளையராஜாவும் அர்த்த மண்டபத்திற்குள் தவறுதலாக நுழைந்ததாகவும் தெரிவித்தனர்.

கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இளையராஜா வெளியே சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இளையராஜாவிற்கு கோயில் யானையை வைத்தோ வெண்குடை பிடித்தோ வரவேற்பு அளிக்கப்படவில்லை என்றும் ஆண்டாள் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *