ஆர்.முத்துக்குமார்
எல்லோருக்குமே நல்ல எதிர்காலம் வரத்தான் செய்யும். அதற்கான கதவுகள் திறக்கப்படும் போது அதில் நுழையத் தயாராக இருப்பவர்களுக்கு அந்த எதிர்காலத்தை சந்திக்கும் தருணம் வந்துவிடும். அந்த நுழைவு புரியாத புதிராக இருக்கும். பலர் சாதிக்க முடியாத காலக் கட்டமைப்பில் சிறைப்பட்டே இருப்பார்கள்!
இந்த சிந்தனையோடு வேலையின்மை பற்றி சிந்தித்தால் ராணுவ ஆட்சேர்ப்பும் ஓரு நல்ல பணியிடம் என்பதை உணர முடியும்.
குளு குளு ஏசி அலுவலகத்தில் கை நிறைய மாதச் சம்பளம் என்ற கனவு காணும் பெருவாரியான இளைஞர்களுக்கு ராணுவப் பணி என்றால் அது பெரிய ஈர்ப்பாக இல்லை என்பது உண்மை தான். ராணுவ பணி என்றால் அதன் நாட்டுப்பற்று, உயிர் நீப்பது போன்ற எண்ண ஓட்ட அடிப்படையில் மட்டுமே செல்லும் பாதை என்று பார்ப்பவர்கள் – நினைப்பவர்கள் இனியாவது தங்களது எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
உலகப் புகழ் நிர்வாகவியல் படிப்பை படித்தால் அதை நாகரீகமாக கருதும் இன்றைய காலக்கட்டத்தில் ராணுவ கட்டுப்பாடு, ராணுவ மிடுக்கு, ராணுவ சிந்தனை போன்ற எண்ணங்கள் மதிப்பு குறைந்தே பார்க்கப்படுகிறது.
நடு வயதில் நாம் கை நிறைய சம்பாதிக்க வேண்டிய திறனை தருவது கல்லூரிகள். அது மருத்துவ படிப்பு, பொறியியல் படிப்பு, நிர்வாக படிப்பாகக் கூட இருக்கலாம்.
இன்று இந்திய ராணுவத்தில் மாணவப் பருவத்தில் சேர்ந்தால் உயர் மருத்துவ படிப்போ, பொறியியல் படிப்போ நமது தகுதி அடிப்படையில் இலவசமாக படித்து தேர்ச்சி பெறலாம்!
சர்வதேச புகழ் கல்விக் கூடங்களில் உதவித் தொகை Scholarship பெற்று படிப்பது போன்று தான் இந்திய ராணுவத்தில் சேரும் மாணவர்களுக்கு மேற்படிப்பு வசதிகள் காத்திருக்கிறது.
அந்த எண்ணத்தோடு ராணுவ சேவைக்குச் செல்ல எண்ணம் உடையவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அக்னிபாத் திட்டம் பற்றி : இது ராணுவத்தில் குறுகிய காலப் பணி நியமனம் போன்றது.
அதில் தொடர்ந்தால் முப்படை தளபதியாகக் கூட உயரலாம்; அந்த கொள்கைகளுடன் அக்னிபாத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இதில் ஆட்சேர்ப்புக்கான தகுதி வயது 17ஐ தாண்டியிருக்க வேண்டும்; 21 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி 10வது அல்லது 12வது வகுப்பு தேர்ச்சியாகும்.
அக்னிபாத் திட்டத்தில் பணிக்காலம் 4 ஆண்டுகள் இருக்க வேண்டும். பிறகு மதிப்பீடு செய்யப்பட்டு 25% பேர் பணியில் நிரந்தரமாக்கப்படுவார்கள்.
முதல் ஆண்டில் மாதச் சம்பளம் ரூ.30 ஆயிரம்!
அக்னிபாத் திட்டத்தில் சேருபவரை ‘அக்னிவீர்’ என்பார்கள். அவர்களுக்கு உடல்வாகிற்கு ஏற்ற பயிற்சிகள், வேண்டிய ஆரோக்கியம், உடற்தகுதியை பெற வைத்து விடுவார்கள்.
ஆக இத்திட்டத்தில் இதர பிரஜைகளுக்கு பெரும் வாழ்க்கை சமாச்சாரங்கள் உறுதியாக கிடைத்து விடும். வேலைவாய்ப்பை உயர்த்துவதுடன் நமது ராணுவ வலிமையயும் உறுதி செய்யும் நல்ல செயல் திட்டமாகும்.
ராணுவத்தில் அதிக அளவில் வேலைவாய்ப்பை நாடுபவர்கள் அதிகமாக இருப்பது நம் நாட்டில் தான், தற்சமயம் இந்திய ராணுவத்தில் 16 லட்சம் பேர் பணிபுரிகிறார்கள். கிட்டத்தட்ட ஆண்டிற்கு 60 ஆயிரம் பேர் ராணுவ சேவை முடித்து ஓய்வு பெறுகிறார்கள்.
இந்த பணியிட ஆட்சேர்ப்புக்கு ராணுவம் நாடெங்கும் 100க்கும் மேற்பட்ட முகாம்களை நடத்துகிறது.
இந்த ஆண்டு அக்னிபாத் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 15ந் தேதி கடைசி நாளாகும். மேலும் இத்தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ராணுவ ஆட்சேர்ப்பு தலைமை அலுவலக இயக்குனர் பாத்ரே தெரிவித்துள்ளார்.
அக்னிபாத் திட்டத்தின் கீழ், ராணுவ ஆட்சேர்ப்பில் தற்போது முதலில் உடற்தகுதித் தேர்வும், பின்பு எழுத்துத் தேர்வும் நடைபெறுகிறது. இம்முறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இனிமேல் முதலில் ஆன்லைன் மூலமாக பொது நுழைவுத் தேர்வு நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்கள், அடுத்தக் கட்டமாக உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் பின்னர் இறுதித் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். பொதுப்பணி, தொழில்நுட்பம், குமாஸ்தா, ஸ்டோர் கீப்பர், தொழில்நுட்பம், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான ஆன்லைன் தேர்வு வரும் ஏப்ரல் 17ந் தேதி முதல் 30ந் தேதி வரை நாடு முழுவதும் 176 இடங்களில் நடைபெறுகிறது.
தேர்வு எழுதுவோர் அறிந்துகொள்ளும் வகையில் தேர்வுக்கான வழிமுறைகள், மாதிரி வினாத் தாள்கள் ஆகியவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இத்தேர்வில் பங்கேற்க ரூ.500 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் 50% ஆன ரூ.250ஐ ராணுவம் பங்களிப்பாக வழங்கும். தேர்வு எழுதுவோர் ரூ.250 செலுத்தினால் போதும். ஒரு விண்ணப்பதாரர் தேர்வு எழுத 5 மையங்களை தேர்வு செய்யலாம். அதில் ஒரு தேர்வு மையம் அவர்களுக்கு ஒதுக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 79961 57222, 044 256774924 ஆகிய எண்ணிலும் jiahelpdesk2023@gmail.com, joinindianarmy@gov.in ஆகிய இ–மெயில் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.
இதில் சேர்ந்து பயனடைபவர்கள் பின்னர் முன்னாள் ராணுவ வீரர் என்றழைக்கப்பட்டு பலவித பணிகளுக்கு முன் உரிமையும் பெறுகிறார்கள். காவல்துறை, பாதுகாப்பு பணியாளர்கள், மத்திய அரசின் பல்வேறு ரகசியப் பிரிவுகள், வங்கி சேவைகள் என பலத்துறைகளில் பணிகள் காத்திருக்கின்றன.
ஆயுதத்தைக் கையாளும் பயிற்சியுடன் அமைதியான வாழ்வின் மேன்மையை உணர்ந்த அவர்களது சேவை நாட்டிற்கு என்றும் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட சமுதாய சிற்பிகளை உருவாக்க இத்திட்டம் அமுலில் இருக்கிறது, இன்றைய இளைஞர்களுக்கு இச்சேவைத் திட்டம் பற்றிய புரிதல் மிக அவசியமாகும்.