பெங்களூரு, ஜூலை 14–
வயிற்று வலிக்கு நிவாரணம் தேடி வந்த, இளைஞரின் வயிற்றை கோடாறியால் வெட்டிய, கோயில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேடகுட்டா கிராமத்தில் காசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. அந்தக் கோயிலில் ஐகப்ப கட்டா என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் பெற, பூசாரி ஜக்கப்பா கட்டாவிடம் கூறுகிறார்கள்.
பூசாரி ஜக்கப்பா கட்டா பக்தர்களைக் கீழே கிடத்தி, அவர்களுக்கு வலி இருப்பதாக அவர்கள் கூறும் இடத்தில் கற்பூரம் கலந்த வெந்நீரில் தடவிய கோடரியால் வெட்டுவார். வெட்டிய பின் மஞ்சள் பொடியை அங்கே ஊற்றி கட்டு போடுவார்கள். இவ்வாறு செய்வதால் தீராத வலிகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பூசாரி கைது
அந்த வீடியோவில் வயிற்று வலியோடு வரும் இளைஞன் தரையில் படுத்திருக்கிறான். அவரது கைகளும் கால்களும் மற்றவர்களால் பிடிக்கப்படுகின்றன. அப்போது பூசாரி ஜெகப்பா இளைஞன் வயிற்றில் இரண்டு முறை கோடரியால் வெட்டினார். கோடாரி வயிற்றைக் கிழித்து ரத்தம் கொட்டுகிறது. அப்போது இளைஞன் வலி தாங்க முடியாமல் அலறி துடிக்கும்போது, இளைஞனின் வயிற்றில் மஞ்சள் பொடியை ஊற்றி கட்டு போட்டுள்ளனர்.
நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமர்நாத் ரெட்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க லோகாபுரா போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து பூசாரி ஜக்கப்பா கட்டாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூடநம்பிக்கைகளுக்கு மத்தியில் நரபலி போன்ற கொடுமையான மூடநம்பிக்கை என சமூக ஆர்வலர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.