நல்வாழ்வுச் சிந்தனைகள் 3
நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய விஞ்ஞானி என்றும் இளமையாக இருக்க கூறும் உணவு முறை யோசனைகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஒரு ஜப்பானிய விஞ்ஞானி உணவு முறையில் சில விதிகளை பின்பற்றினால் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கலாம் என கூறுகின்றார். இதற்காக அவர் நோபல் பரிசினை 2016-ல் பெற்றுள்ளார்.
நாம் கொஞ்ச நேரம் உண்ணா விரதம் இருந்தால் நம் உடலில் உள்ள செல்கள் பழையனவற்றினை கழித்து புதுமை பெற்று விடுகின்றன. இதனை தானியங்கி என்பர் இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். உணவு நேரத்தில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும். அவ்வளவுதான்.
இது எளிய முறைதான். இந்த முறைக்கு டயட் வின்டோஸ் என்று பெயர். உதாரணமாக ஒருவர் காலை 8 மணிக்கு காலை உணவு உட்கொள்கின்றார். பின் மதியம், நடு நடுவே என்று தொடர்ந்து இரவு உணவினை 8 -10 மணிக்கு முடிக்கின்றார் என்றால் இந்த உணவு முறை 12-14 மணி நேரம் வரை உள்ளது.
2017-ல் ஒரு ஆய்வு நடத்தினார்கள். அதன்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உணவு உட்கொண்டவர்கள் சற்று குறைந்த ஆரோக்கியத்துடன் இருந்தார்கள்.
இவர்களை விட ஆரோக்கியத்துடன் இருந்தவர்கள் யார் தெரியுமா?
காலை 8 மணிக்கு உணவினை உண்டு பின் மதியம் 2 மணிக்குள் மதிய உணவினை முடித்துக் கொள்பவர்கள்; இதற்கு பின் தேவையான பொழுது நீர் மட்டுமே அருந்துபவர்கள் மிகுந்த ஆரோக்கியமாக இருக்கிறார்கள். இவர்கள் அநேக நோய்களில் இருந்து பாதுகாக்கப்பட்டு ஆரோக்கியத்துடனும் இளமையுடனும் இருக்கின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன.
உண்ணும் நேரம் என்பதனை சற்று சுருக்கும்பொழுது ஆரோக்கியம் கூடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனை வளரும் குழந்தைகள் கர்ப்பகாலம், குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் போன்றவற்றில் இருப்பவர்கள் செய்ய வேண்டாம் என்றும் அந்த விஞ்ஞானி கூறுகிறார்.
குறிப்பிட்ட நோய் பாதிப்பு உடையவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று அதனை பின்பற்றவும் நல்ல ஆரோக்கியத்தில் இருக்கும் நடுத்தர வயதினர் இதனை பின்பற்றுவது ஆரோக்கியத்தினைக் கூட்டும்.
இரவு தூங்கும் நேரம் நாம் இயற்கையாகவே உண்ணாமல் தான் இருக்கின்றோம். ஆனால் தூங்கச் செல்லும் வரை ஓயாமல் உண்கின்றோம். இரவு நேரம் சென்று உண்ணும்பொழுது உடலின் செயல்கள் கடிகாரம் போன்று செயல்படாமல் சற்று தன் கட்டுப்பாட்டினை இழக்கின்றது. இரவு அதிக நேரம் விழிப்பதும் உண்ணுவதும் கார்டிஸால் ஹார்மோனை அதிகப்படுத்தி விடுகின்றது.
எனவே தான் காலையில் சோர்வாக கார்டிஸால் அளவு குறைந்து எழுகின்றோம். இதனால் சர்க்கரை நோய், உடல் பருமன், மனச் சோர்வு என பல தாக்குதல்கள் வருகின்றன.