நல்வாழ்வு சிந்தனைகள்
கோடை காலத்தில் தகிக்கும் வெயிலில் ஏற்படும் தாகத்தைத் தணிக்க இளநீருக்கு மிஞ்சியது எதுவுமில்லை.
“இளநீர்…” என்றால் யாருக்குத்தான் பிடிக்காது?! அதில்தான் எவ்வளவு இதம், என்னவொரு குளுமை!
ஆனால் இளநீர் உடலுக்கு குளுமை தருவதைத் தாண்டி, இன்னும் எண்ணற்ற பலன்களை வழங்கக் கூடியது. அவற்றை அறிய தொடர்ந்து படியுங்கள் :–
பழரசங்கள் தொண்டைக்கு இதமாக இருந்தாலும் சிரமமின்றி, அதிக செலவின்றி மிகவும் தூய்மையாகக் கிடைக்கக் கூடியது இளநீரே.
கோடை காலத்தில் இதைத் தேடிப் போக வேண்டிய அவசியமில்லாமல், எல்லா ஊர்களிலும் ஆங்காங்கே சாலையோரங்களில் குவிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
மருந்து, மாத்திரைகள் சாப்பிட நேரும்போது, கூட இளநீர் சாப்பிட்டால் உடலில் மருந்து செரிக்கப் பெரிதும் உதவுகிறது.
இயற்கை தந்துள்ள வரப்பிரசாதமான இளநீர், ஒரு முழுமையான சத்துள்ள நீராகும். தேங்காய் என்பது பழமெனவும் கருதப்படுகிறது. பழங்களில் நடுவே உள்ள ‘எண்டோஸ்பெர்ம்’ என்ற பகுதியே, பழம் பெரிதாகி சதைப் பற்றுடன் உருவாகக் காரணம். இந்த ‘எண்டோஸ் பெர்ம்’ தேங்காயில் திரவ வடிவில் உள்ளது.
வெப்பம் அதிகமாக உள்ள இடங்களிலும், கடற்கரை பகுதிகளிலும் பெரிதளவில் வளரும் தென்னை மரங்கள், இந்தியாவில் அதிக அளவில் கேரளாவில் காணப்படுகிறது. வெப்பம் அதிகமுள்ள பகுதியில் வாழும் மக்களுக்கு இயற்கை தந்த அருமருந்து இளநீர் என ஆயுர்வேதம் எடுத்துரைக்கிறது.
ஆயுர்வேத மருத்துவ முறைப்படி இளநீர், உடலின் முக்கிய செயல்கள் பலவற்றை எளிதாக்க மிகவும் உதவும் ஒரு மருந்து. நோய் தடுக்கும் இளநீர்!
உடல் வெப்பத்தை பெரிதளவில் தணிக்கும் இளநீர், சீரண உறுப்புகள் சரியாக இயங்கத் தேவையான சூட்டை மட்டும் உடலில் தங்க வைக்கிறது. இதனால் கோடைக்காலத்தில் உடல் சூடு அதிகமாவதால் ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளை இளநீர் பருகுவதால் தடுக்கலாம்.
கோடை வெயிலில் பல தொற்று நோய்கள் உடலின் உள்உறுப்புகளையும் சருமத்தையும் பாதிக்கக் கூடும். அம்மை நோய், வயிற்றுப் போக்கு, காலரா போன்றவை ஏற்படும்போது உடலில் உள்ள சலைன் சத்தும் ஆல்பமின் சத்தும் குறையக் கூடும். இதனை சீராக்க தினமும் இளநீரை பருகுவது நல்லது.
உடல் சூடு அதிகமாவதால் உடலில் உள்ள நீர் சுண்டிப்போய், சிறுநீர் கழிக்க சிலர் சிரமப்படுவர். இப்பருவத்தில்தான் சிறுநீர் தொற்றுநோய்களும் அதிகம் பரவுகிறது. இவர்கள் இளநீரைப் பருக சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
வளரும் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் இளநீர் சிறந்த டானிக். இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் சோர்வை இளநீரில் உள்ள இனிப்புத் தன்மை நீக்குகிறது.