சென்னை, பிப்.22–
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வெளிநாடுகளில் உள்ள 14 தேர்வு மையங்களில் நடைபெறும் எனத் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி போன்ற ஆயுஷ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நிகழாண்டுக்கான நீட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. நாட்டில் உள்ள 554 தேர்வு மையங்களில் மே 5-ம் தேதி இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இந்தியாவுக்கு வெளியே தேர்வெழுதும் வகையில் எந்த மையங்களும் தேர்வுக்கான அறிவிப்பில் இடம்பெறவில்லை என மாணவர்கள் சிலர் கவலை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், தாய்லாந்து உள்பட 12 வெளிநாடுகளில் உள்ள 14 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெறுமென தேசிய தேர்வு முகமையின் மூத்த இயக்குநர் (தேர்வுகள்) சாதனா பராசரர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தில் இந்தியாவில் உள்ள தேர்வு மையங்களைத் தேர்வு செய்து கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்வு மையங்களை மாற்ற வாய்ப்பு அளிக்கப்படும். விண்ணப்பம் பதிவு நிறைவடைந்தவுடன், விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான கால அவகாசம் வழங்கப்படும். அப்போது, தங்களுக்குரிய நாடுகளையும் தேர்வு மையங்களையும் அவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை, அபுதாபி, ஷார்ஜா; குவைத்தின் குவைத் நகரம்; தாய்லாந்தின் பாங்காக், இலங்கையின் கொழும்பு; கத்தாரின் தோஹா; நேபாளத்தின் காத்மாண்டு; மலேசியாவின் கோலாலம்பூர்; பஹ்ரைனின் மனாமா; ஓமனின் மஸ்கட் ; சவூதி அரபியாவின் ரியாத்; சிங்கப்பூர் ஆகிய 14 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9-ம் தேதி கடைசி நாளாகும்.