சிறுகதை

இலாபம் -ஆவடி ரமேஷ்குமார்

ஆட்டுக்கறி வாங்குவதற்காக ஏழுமலையின் கடைக்கு வந்திருந்தார் பூபதி.

பல வருட வாடிக்கையாளர் அவர்.

வந்தவர் பொறுமையாக கறிவாங்கிவிட்டு உடனே வீட்டுக்கு

போகாமல் ஏழுமலையை பார்த்து,

” உங்க மகனோட வேலை விசயத்துல நீங்க ஏன்

அன்னிக்கு என்கிட்ட பொய் சொன்னீங்க?” என்று கேட்டார்.

” என்னது, மகன் விசயத்துல நான் பொய் சொன்னேனா?

நீங்க எதைச் சொல்றீங்க? ” திருப்பிக் கேட்டார் ஏழுமலை.

” நீங்க இந்த கிராமத்துல சிக்கன்,மட்டன் கடையை நடத்தினாலும் உங்க மகனை

ஒரு பெரிய இன்ஜினீயரா ஆக்கிட்டீங்க.உங்க மகன் தினமும் காலைல முதல் பஸ் ஏறி வேலைக்கு போறான்.

‘ எங்க’ னு அன்னிக்கு நான் கேட்டதுக்கு,

‘ சோழிங்கநல்லூர்ல ஒரு பெரிய தொழிற்சாலைல இன்ஜினீயரா வேலைக்கு போறான்’ னு சொன்னீங்க.ஞாபகம் இருக்கா? அப்படி சொன்னது பொய் தானே?” ஏன் என்கிட்ட அப்படியொரு பொய்யை சொன்னீங்க?”

அசடு வழிந்தார் ஏழுமலை.

இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல்

” இல்லைங்க பூபதி.நான் உண்மையைத்தான் சொன்னேன்.ஏன் உங்களுக்கு

இந்த குழப்பம்?” என்று பதிலுக்கு கேட்டார்.

” பார்த்தீங்களா…மறுபடியும்

பொய் சொல்றீங்களே….நேத்து

நான் ஒரு வேலை விசயமா

சோழிங்கநல்லூர் போயிருந்தேன். அங்க உங்க மகன், சிக்கன்- மட்டன் கடையை போட்டு வியாபாரம் பண்ணிட்டிருந்ததை என் ரெண்டு கண்ணாலயும் பார்த்தேன்.அது தான் இன்ஜினீயர் வேலையா? என்னங்க ஏழுமலை…பொய்

சொன்னாலும் பொருத்தமா சொல்ல வேண்டாமா…

சரி உண்மையையே நீங்க சொல்லியிருந்தாலும் நான் எதுக்கு உங்க தொழிலை பத்தி தப்பா நினைக்கப்போறேன்?”

” ஓ…உண்மையை கண்டு பிடிச்சிட்டீங்களா? அது வந்துங்க பூபதி….நான் முன்னமே சொன்னபடி என் மகன் தீபக் ஒரு தொழிற்சாலையில இன்ஜினீயராத்தான் வேலை பார்த்தான்.உண்மை.நாலு மாசம் வேலை பார்த்தவன்…என் மகனாச்சே.. என் ரத்தம்..! சும்மா இருப்பானா? அவன் போயிருந்த ஏரியாவுல புதுசு புதுசா நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்திருக்கு. பக்கத்துல சிக்கன் கடையோ மட்டன் கடையோ எதுவும் இல்லை.சிக்கன்,மட்டன் வாங்கனும்னா மக்கள் ரொம்ப தூரம் போயித்தான் வாங்கிட்டு வர்றாங்களாம்.இதை விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டவனுக்கு புத்தி மாறிப் போச்சு. திடீர்னு என்கிட்ட கூட சொல்லாம அவனுடைய நண்பர்கள் உதவியோட சிக்கன், மட்டன் கடையை போட்டுட்டான். வியாபாரம் சூப்பரா நடந்திருக்கு.அதுக்கப்புறம் தான் என்கிட்டயே சொன்னான். இப்ப வியாபாரத்துல என்னையையே மிஞ்சிட்டான்.

நான்,’ என்னப்பா தீபக்..உன்னை இன்ஜினீயருக்கு படிக்க வச்சா இப்படி என்னை மாதிரியே வியாபாரி ஆகிட்டியே’ னு வருத்தமா கேட்டேன்.

அதுக்கு அவன், ‘ கறிக்கடைல வர்ற இலாபத்தை பார்க்கும் போது சம்பளம் ரொம்ப ரொம்ப குறைவான இருக்குப்பா. இதுக்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சோம்னு வருத்தமா இருக்குப்பா’ னு சொன்னான்.

‘ சரி உனக்கு பிடிச்சதை சிறப்பா செஞ்சு நல்லா இரு’னு வாழ்த்திட்டேன்.வேற என்னங்க பண்றது? இப்ப சொல்லுங்க, என் மேல தப்பா?

நல்லா படிக்க வச்சேனே..!”

” உங்க ரெண்டு பேர் மேலயும் தப்பு இல்லீங்க. உண்மை என்னனு இப்ப நான் நல்லா புரிஞ்சிட்டேன். ஸாரிங்க ஏழுமலை. நான் வரேன்” என்று

சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினார் பூபதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *