செய்திகள்

இலவச பூஸ்டர் தடுப்பூசிக்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கோவை, ஏப்.17-–

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் ஹீமோபீலியா தின விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது அவர் பேசியதாவது:-–

இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ கட்டமைப்புகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதில் சென்னை முதலிடமும் கோவை 2–வது இடமும் பிடித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது வரை 61 லட்சத்து 18 ஆயிரத்து 943 பேர் பயனடைந்துள்ளனர்.

இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் ‘இன்னுயிர் காப்போம்’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தினால் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குறைந்துள்ளது.

உதவித்தொகை வழங்க நடவடிக்கை

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசிற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இதுவரை 24 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். விரைவில் இந்த இடங்கள் நிரப்பப்படும். சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட போதிலும், முகக்கவசம் அணிவது அவசியமாகும்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். கடந்த 2 ஆண்டுகளாக கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை சரிவர வழங்கப்படவில்லை. எனவே ஒரு குழு அமைத்து விடுபட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.