சிறுகதை

இலவசப் பயணம் – ராஜா செல்லமுத்து

தமிழகத்திலும் டெல்லியிலும் பெண்களாகப் பிறந்தால் அத்தனை பேரும் ஒரு குறிப்பிட்ட அரசு பேருந்தில் இலவசமாக செல்லலாம் என்று அரசு சட்டம் போட்டிருக்கிறது.

அதனால் வீட்டில் முடங்கிக் கிடந்த பெண்கள் எல்லாம் எங்கேயாவது காலாறச் சுற்றி வரலாம் என்பதை போல் பஸ்ஸிலேயே நகரத்தை உலா வரலாம் என்று கிழவி முதல் சிறுமிகள் வரை கிளம்பி விடுகிறார்கள்.

முன்பெல்லாம் வயதானவர்களைப் பார்ப்பது அவ்வளவு அரிதாக இருந்த சென்னை நகரத்தில் இலவச பேருந்து பயணம் என்பதால் இரண்டு கைகளிலும் இரண்டு பைகளைத் தூக்கிக் கொண்டு வயதானவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இப்போது இலவச பேருந்துகளில் எல்லாம் பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது. ஒரு பக்கம் இது பெண்களுக்கு சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் இன்னொரு விசாரணையும் வருகிறது. கூலி வேலை செய்பவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கிறது.

ஆனால் அரசாங்க வேலை செய்யும் பெண்கள், மாதத்திற்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் பெண்கள் கூட இலவச பயணம் மேற்கொள்வது எப்படி? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்காமல் இல்லை .அதைப் பேருந்திலேயே பெண்களின் காது படப் பேசி விடுகிறார்கள். அது உண்மையா இருக்கும் போது சம்பளம் வாங்கும் பெண்களுக்கு உறைக்கிறது. வீட்டு வேலை செய்பவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு அந்த வார்த்தை இனிக்கிறது.

இப்போதெல்லாம் ஆண்கள் இருக்கையைக் கூட ஆக்கிரமித்து பெண்கள் அமர்ந்து கொள்கிறார்கள் .

காரணம் கேட்டால் பெண்களுக்கு இருப்பது தனி இருக்கை. ஆண்கள் இருக்கை பொது இருக்கை அதில் யார் வேண்டுமானாலும் உட்காரலாம் என்று வியக்யானம் பேசுகிறார்கள்.

நிரம்பி வழியும் பெண் பயணிகளுக்கு நடத்துனர் தலையை எண்ணி எல்லாம் பயண சீட்டு வழங்குவதில்லை.

குத்து மதிப்பாக கிழித்து கொடுக்கிறார்கள். அதை வாங்கிய பெண் ஏதோ ஒரு பெண் அந்த பயணச் சீட்டை தியாகம் செய்வது போல எல்லோருக்கும் விநியோகம் செய்கிறாள். எனக்கு எதுக்கு நாலு டிக்கெட் .எனக்கு ஒன்னு போதும். எனக்கு எதுக்கு அஞ்சு டிக்கெட் .எனக்கு ஒன்னு போதும் என்று பெண்கள் அந்த பயண சீட்டை வைத்துக்கொண்டு ஏலம் போடுவது .அந்த பேருந்தில் கேட்கத்தான் செய்கிறது .

ஏனென்றால் எத்தனை பெண்கள் ஏறினார்கள்? எத்தனை பெண்கள் இறங்கினார்கள்? என்று எல்லாம் எந்த செக்கரும் கணக்குப் பார்ப்பதில்லை.

பணம் கொடுத்து கிழிக்கும் பயண சீட்டில் இன்வாய்ஸ் என்ற ஒன்று எழுதப்படுவதால் எத்தனை டிக்கெட் வித்திருக்கிறார் என்று அத்தனைக்கும் அவர் பணம் கட்டியாக வேண்டும் என்ற சூழ்நிலை இருப்பதால் பணம் கொடுக்கும் பயணச்சீட்டை இவர் இவ்வளவு உதாசினமாக கிழித்து கொடுப்பதில்லை.

மாறாக இலவச பயண சீட்டு என்பதும் அதை அப்படியே கொத்துக்கொத்தாக கிழித்துக் கொடுத்து விடுகிறார்கள்.

இதைப் பார்த்த பழனி என்ற ஒருவர் வருத்தப்பட்டு பேசினார்.

என்னங்க இது ,இலவச பயணம் அப்படிங்கறது மரியாதைக்குரிய விஷயம் .அத இப்படி கிழிச்சு மரியாதையில்லாம ஆக்கிட்டிங்க. ஒவ்வொரு சீட்டுக்கும் ஒரு பெண் பயணம் போனதாக அர்த்தம். நீங்கள் கிழிக்கிற ஒவ்வொரு சீட்டும் அரசாங்கத்துக்கு போய் சேருது .ஒரு மாசத்துல, அஞ்சு மாசத்துல ஒரு வருஷத்துல இத்தனை பெண்கள் பயணம் செஞ்சிருக்காங்க, இவ்வளவு தொகை அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்பட்டு இருக்குன்னு கணக்கு காமிக்கிறதுங்க, இந்த இலவசப் பயணச்சீட்டு சிறப்பானது. அதப் போயி இவ்வளவு உதாசினமா கொடுக்குறீங்களே.? இது தப்பு பெண்களுக்கு போய் நேரடியா ஒவ்வொருத்தர் கையிலும் கிழித்து குடுங்க என்று பழனி சொன்ன போது , அதுவரையில் அமர்ந்த இடத்தில அமர்ந்து பயண சீட்டு கொடுத்துக் கொண்டிருந்த அந்த நடத்துனருக்கு சுரீர் என்று வலித்தது.

எழுந்து போய், யார் யாருக்கு டிக்கெட் வேணும் என்று ஒவ்வொரு பெண்ணின் கையிலும் பயணச் சீட்டை திணித்துக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்த பழனி ஜன்னல் வழியே சாலையைப் பார்த்தார். இந்தப் பெண்ணும் சாலையில் போவதாக தெரியவில்லை என்று மனதிற்குள் நினைத்தார் பழனி.

அத்தனை பெண்களும் பேருந்தில் தானே இருக்கின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published.