செய்திகள்

இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவு

Makkal Kural Official

பிரதமராக ஹரிணி அமரசூரிய பொறுப்பேற்பு

கொழும்பு, செப். 25–

இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள அநுர குமார திசாநாயக்க இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டதுடன், நவம்பர் 14-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் 5 ஆண்டு பதவிக்காலம் ஆகஸ்ட் 2025 வரை இருக்கிறது. ஆனாலும், தேர்தல் வாக்குறுதியில் நாடாளுமன்றத்தை உடனடியாக கலைப்பதாகத் தெரிவித்திருந்ததன்படி, புதிய இலங்கை அதிபராக பொறுப்பேற்ற அநுர குமார திசநாயக உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நவம்பர் 14-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் நவம்பர் 21 ந்தேதி புதிய நாடாளுமன்றம் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.”மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படாத நாடாளுமன்றத்துடன் ஆட்சியைத் தொடர்வதில் எந்த நன்மையும் இல்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 255 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 3 பேர் மட்டுமே அதிபர் அநுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் திசாநாயக்க, அமரசூரிய மற்றும் ஹேரத் ஆகிய 3 உறுப்பினர்கள் காபந்து அமைச்சர்களாக நீடிப்பர்.

பிரதமர் பொறுப்பேற்பு

இலங்கையின் பிரதமராக திசநாயக்காவால் அறிவிக்கப்பட்ட ஹரிணி அமரசூர்ய, 3வது பெண் பிரதமராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக புதிய அரசு ஆட்சி அமைக்கும் வகையில் பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தன ராஜினாமா செய்தார். அவரது அமைச்சரவையில் இருந்த அனைவரும் பதவி விலகினார்கள். இதனை தொடர்ந்து நேற்று புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இலங்கையைப் பொருத்தவரையில் அதிபரே அமைச்சர்களை நியமிப்பதுடன், அமைச்சரவையின் தலைவராகவும் செயல்படுவார். பிரதமர் அதிபரின் பிரதிநிதியாக செயல்படுவார். முந்தைய ஆட்சியில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்லாத வகையில், கொழும்பு, யாழ்ப்பாணம் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஊழல் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதும், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) $2.9bn பிணை எடுப்பு ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதும் அநுர குமார திசாநாயக்க முன்னிருக்கும் உடனடி சவால்கள்.

கடந்த சனிக்கிழமை அதிபராக பொறுப்பேற்ற அநுர குமார திசாநாயக்க இலங்கையின் முதல் இடதுசாரி அதிபராவார். கடந்த தேர்தலில் 3% வாக்குகளை மட்டுமே பெற்ற இவர், இந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். ஊழல் மற்றும் வறுமைக்கு எதிரான திசாநாயக்கவின் கொள்கைகள் மக்களைக் கவர்ந்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *