கொழும்பு, செப் 23
இலங்கை தேர்தலில் திடீர் திருப்பமாக 2-வது சுற்று ஓட்டு எண்ணிக்கையில் வெற்றி பெற்றதன் மூலம் திசநாயகே, புதிய அதிபர் ஆனார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி அடைந்தார்.
அனுரா குமார திசநாயகே
இலங்கையில் 9-வது அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.
மும்முனை போட்டி
2022-ல் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் அதனால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பிறகு நடந்த முதல் அதிபர் தேர்தல் இதுவாகும்.
இந்த தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே உள்பட 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
எனினும் சுயேச்சையாக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கே, ஐக்கிய மக்கள் சக்தி முன்னணி சார்பில் களம் கண்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, பல்வேறு கட்சிகள் அடங்கிய தேசிய மக்கள் சக்தி முன்னணியின் வேட்பாளரான தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே ஆகிய 3 பேருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது.
விடிய விடிய வாக்கு எண்ணும் பணி
இலங்கையில் உள்ள 22 மாவட்டங்களிலும் அமைதியாக வாக்குப் பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.
வாக்களிக்க தகுதியுடைய 1 கோடியே 70 லட்சம் பேரில் 75 சதவீதம் பேர் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர். இதில் ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகளவில் வாக்களித்தனர்.
வாக்குப் பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணும் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பின்னர் மக்கள் வாக்குச் சாவடிகளுக்கு வந்து அளித்த வாக்குகள் எண்ணப்பட்டன.
பல சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணும் பணி விடிய விடிய நீடித்தது. வாக்கு எண்ணிக்கையின்போது அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள்
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்தார்.
அவருக்கு அடுத்தபடியாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா 2-வது இடத்தில் இருந்தார். அதே வேளையில் ரணில் விக்ரமசிங்கே மிகவும் குறைவாக வாக்குகளை பெற்று 3-வது இடத்தில் பின் தங்கினார்.
இலங்கை தேர்தல் பொறுத்தவரை 50 சதவீதத்துக் கும் அதிகமான வாக்குகளை பெறுபவர் வெற்றிப் பெற்று அதிபராவார். அந்த வகையில் அனுரா குமார திசநாயகே 52 சதவீத வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்தார். ஆனால் நேரம் செல்ல செல்ல சஜித் பிரேமதாசாவின் கை சற்று ஓங்கி இருந்தது
இதன் காரணமாக அனுரா குமார திசநாயகேவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து குறைய, சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் அதிகரித்து கொண்டே சென்றது.
ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி
அதே சமயம் தொடர்ந்து 3-வது இடத்தில் பின் தங்கிய ரணில் விக்ரம சிங்கே படுதோல்வி அடைந்தார். அவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
அதேபோல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, தமிழ் பொது கூட்டமைப்பு என்ற பெயரில், சில தமிழ் அமைப்புகளின் சார்பில் தமிழர்களுக்கான பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட மட்டக்களப்பு முன்னாள் எம்.பி. அரியநேந்திரன் ஆகியோரும் சொற்ப வாக்குகளை பெற்று படுதோல்வியை சந்தித்தனர்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அனுரா குமார திசநாயகே 56 லட்சத்து 34 ஆயிரத்து 915 (42.31 சதவீதம்) வாக்குகளை பெற்றிருந்தார். சஜித் பிரேமதாசா 43 லட்சத்து 63 ஆயிரத்து 35 (32.8 சதவீதம்) வாக்குகளையும், ரணில் விக்ரமசிங்கே 2 லட்சத்து 29 ஆயிரம் (17.27 சதவீதம்) வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
ஆனால் வெற்றிக்கு தேவையான 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை எந்தவொரு வேட்பாளரும் பெறாததால் 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை (விருப்ப வாக்குகளை எண்ணுவது) நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வெற்றி வாகை சூடினார்
இதுப்பற்றி தேர்தல் கமிஷன் தலைவர் ரத்நாயக்கே கூறுகையில், “தேர்தலில் அனுரா குமார திசநாயகே மற்றும் சஜித் பிரேமதாசா ஆகிய இருவரும் அதிக வாக்குகளை பெற்றுள்ளனர். எனினும் இருவருமே 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறாததால் விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டு, 2 வேட்பாளர்களும் ஏற்கனவே பெற்ற வாக்குகளுடன் சேர்க்கப்படும். இதில் யார் அதிக வாக்குகளை பெறுகிறாரோ அவர் வெற்றிப் பெற்றவராக அறிவிக்கப்படுவார்” என கூறினார்.
தேர்தல் கமிஷன் தலைவரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து விருப்ப வாக்குகளை எண்ணும் பணி உடனடியாக தொடங்கியது. இதில் அனுரா குமார திசநாயகே மற்றும் சஜித் பிரேமதாசா ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இருப்பினும் முதன்மை வாக்கு எண்ணிக்கையை போலவே விருப்ப வாக்குகள் எண்ணிக்கையிலும் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அனுரா குமார திசநாயகே மொத்தமாக 57 லட்சத்து 40 ஆயிரத்து 179 வாக்குகளை பெற்றார். இதன் மூலம் அனுரா குமார திசநாயகே வெற்றி வாகை சூடினார். சஜித் பிரேமதாசா மொத்தமாக 45 லட்சத்து 30 ஆயிரத்து 902 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.
அனுரா குமார திசநாயகே இன்று (திங்கட்கிழமை) அதிபராக பதவியேற்பார் என்று தேசிய மக்கள் சக்தி கட்சி அறிவித்துள்ளது.
நூற்றாண்டு கனவு நனவானது
தேர்தல் வெற்றி குறித்து அனுரா குமார திசநாயகே கூறுகையில், “நூற்றாண்டுகளாக நாம் கண்ட கனவு இறுதியில் இன்று நனவாகியுள்ளது. இந்தக் கனவு நனவாக உழைத்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது.
அதற்காக உங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில், இது என்னுடைய முயற்சி மட்டுமல்ல, நம் அனைவருடைய கூட்டுப் பணியும்கூட. இந்த வெற்றி நம் எல்லோருக்குமானது.
கனவை நனவாக்க, இந்த நிலத்திற்குப் புதிய தொடக்கம் தேவை. சிங்களர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஒற்றுமை, புதிய யுகத்தின் தொடக்கமாக இருக்கும். இதன் அடிப்படையில்தான் மறுமலர்ச்சி தோன்றும். வாருங்கள், எல்லோரும் இதற்காகக் கைகோர்ப்போம்” என்றார்.