செய்திகள் முழு தகவல்

இலங்கை தேர்தலில் எத்தனைக் குழப்பம்

Makkal Kural Official

கொழும்பு, செப் 2

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே, தனது ஐக்கிய தேசிய கட்சியை விடுத்து, சுயேட்சையாக போட்டியிடும் நிலையில், தமிழர் கட்சிகளிடையேயும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் தேதி சனிக்கிழமை நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டு, வேட்பாளர்கள், தமது வேட்பு மனுக்களை கடந்த மாதம் 15ஆம் தேதி, தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில், நாளை மறுநாள் 4 ந் தேதி முதல், தபால் ஓட்டுக்களை பதிவு செய்யலாம் என்று அங்குள்ள தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மறுநாள் முதல் காவல் துறை உள்ளிட்ட சீருடைப் பணியாளர்கள் வாக்களிக்கவும், 5 மற்றும் 6 ந்தேதிகளில் முப்படைகளிலும் உள்ள பணியாளர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் வாக்குகளை பதிவிட முடியும்.

இந்த தேதிகளில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11, 12 ந்தேதிகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து, 21 ந்தேதி பொதுமக்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளது. இலங்கையை பொறுத்தவரையில் தேர்தல் நடைபெறும் தினத்திற்கு மறுநாளே தேர்தல் முடிவுகள் அனைத்தும் அறிவிக்கப்படுவதை இதுவரை வழமையான நடைமுறையாகத் தேர்தல் அதிகாரிகள் கொண்டுள்ளனர். நாட்டில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நேரும் பட்சத்தில் மாத்திரம் தேர்தல் முடிவுகள் வெளியிடுவது தாமதப்படுத்தப்படும்.

சுயேட்சையாக போட்டி

இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தனது சொந்த கட்சியான ஐக்கிய தேசிய கட்சி சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடாமல், சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசி கட்சி மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதால் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அண்மைக்காலத்தில் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்த பிரதான அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும்.

அதன் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பெரும்பான்மையானவர்கள் அக்கட்சியை விட்டு வெளியேறி சமகி ஜன பலவேகய என்ற புதிய கட்சியை உருவாக்கினர். அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரேயொரு இடத்தை மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்டோரும் அதிபர் தேர்தலில் போட்டியில் உள்ளனர். இலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை மக்கள் முன்னணி சார்பில், இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகனும், எம்.பி.யுமான நமல் ராஜபக்சே போட்டியில் உள்ளார்.

இப்படியாக, பல்வேறு குழப்பங்கள் இலங்கை தேர்தலில் நடந்து வரும் நிலையில், தமிழர்களின் அமைப்புகளிலும் இதே குழப்பம் நீடித்து வருவது, தமிழர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும். இலங்கை தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று பலரும் முனைப்பு காட்டினர். அதன்படி, ‘தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பு’ இந்த அதிபர் தேர்தலில் தமிழர் ஒருவரை பொது வேட்பாளரை நிறுத்த தீர்மானித்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

தமிழர் கட்சிகளில் குழப்பம்

ஆனால், வவுனியாவில் நேற்று நடைபெற்ற தமிழரசுக் கட்சி கூட்டத்தில், சஜித் பிரேமதாசாவை அதிபர் தேர்தலில் ஆதரிப்போம் எனவும், அரியநேத்திரன் போட்டியில் இருந்து விலக வேண்டும் எனவும் அக்கட்சியின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். எ. சுமந்திரன் அறிவித்திருந்தார். இந்த செய்தி வெளிவந்த சிறிது நேரத்தில், இது கட்சியின் முடிவல்ல என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக, தமிழர் கட்சிகளிடையே குழப்பம் நிலவி வரும் நிலையில், இலங்கையின் 70 ஆண்டு சுதந்திர வரலாற்றில் இறுதி 30 ஆண்டு காலம் வடகிழக்கு மாகாண மக்களின் பிரச்னை பேசப்பட்ட அளவிற்கு, மலையக தமிழர் பிரச்னை பேசப்படவில்லை என்று கூறி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் போட்டியில் களம் இறங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்ப் பொது வேட்பாளர் அறிவிப்பில், மலையக தமிழர்களை கருத்தில் கொள்ளாததாலேயே தாம் அதிபர் தேர்தலில் களமிறங்கியதாக சொல்லும் அவர், இலங்கை சுதந்திரம் பெற்ற உடனே, மலையகத் தமிழர்களுக்கான வாக்களிக்கும் உரிமை, குடியுரிமையை அப்போதைய சிங்கள அரசுகள் பறித்தது. அது முதலாக 30 ஆண்டு காலம் மலையகத் தமிழர்கள் போராடியது வெளிச்சத்துக்கே வரவில்லை. மேலும், மலையக தமிழர்களின் தோட்டக் குடியிருப்புகளின் உயரம் 6 முதல் 7 வரையே உள்ள நிலையில், தேர்தல் அலுவலம் அமைக்க கூரையின் உயரம் 10 அடி இருக்க வேண்டும் என்றெல்லாம் தேர்தல் ஆணையம் கூறி உள்ளதை நாங்கள் அதிபர் தேர்தலில் நிற்பவர்களிடம் வலுவாக தெரிவிக்க வேண்டும். எனவே, இந்த தேர்தலில் நிற்பது வெல்வதற்காக அல்ல; மாறாக மலையக தமிழர்களின் பிரச்சினைகளை வலுவாக சொல்வதற்காக என்று கூறி தேர்தல் களத்தை சூடுபடுத்தி வருகிறார்.

இந்நிலையில், தமிழ் மக்கள் விடுதலையடைய வேண்டுமானால், அனைவரும் ஒன்றுபட வேண்டும். தமிழர்கள் ஆளுக்கொரு பக்கம் திரிவதால், யாருக்கும் எந்த பலனும் கிடைக்காது என்றும், இதுதான் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எண்ணமும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *