தலையங்கம்
இலங்கையில் 2024-ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21 ந்தேதி நடைபெற இருக்கிறது. ‘தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பு’ இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவரை பொது வேட்பாளரை நிறுத்த தீர்மானித்துள்ளது.
அதை தொடர்ந்து ஜனாதிபதி பதவிக்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக அறிவித்துள்ளனர். இப்படியாக இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழர் பொது வேட்பாளராக களமிறக்கப்படுவது இதுவே முதல் முறை.
இதற்கு முன்னர் தமிழ் வேட்பாளர்கள் தனித்து ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்ட போதிலும், கணிசமான வாக்குகளை பெற முடியவில்லை. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் களம் கண்டுள்ள தமிழ் வேட்பாளர்கள் முன்னுள்ள வாய்ப்புகள் எப்படி? அரியநேத்திரன், 2004 ஆம் ஆண்டு முதல் முறையாக வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றார்.
அதனைத் தொடர்ந்து, 2010 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றியை ஈட்டி, நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவானார். இம்முறையும் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. இலங்கை வாழ் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் நலவாழ்வுக்கு இவரது வெற்றி உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நமது தமிழ்த் தேசிய உணர்வை வெளிகாட்டுவதற்காகவே வேட்பாளராக களமிறங்குகின்றேனே தவிர ஜனாதிபதியாவதற்கு அல்ல என்று பா.அரியநேத்திரன் கூறியிருப்பது அவரது வெற்றியில் இருக்கும் குறைபாடுகளையே சுட்டிக்காட்டுகிறது.
இனப் படுகொலை நிகழ்ந்ததிலிருந்து தமிழ் மக்கள் உரிமையற்ற இனமாக இருப்பதாக கூறிய அவர், தங்களுக்கான உரிமை கிடைக்க வேண்டும் என்பதை சர்வதேசத்திற்கும் ஸ்ரீலங்காவிற்கும் வலியுறுத்துகின்ற ஒரு அடையாளத்திற்காக மாத்திரமே தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக அவர் கூறுகிறார்.
இலங்கையின் 70 ஆண்டு சுதந்திர வரலாற்றில் இறுதி 30 ஆண்டு காலம் வடகிழக்கு மாகாண மக்களின் பிரச்சனை பேசப்பட்ட அளவிற்கு, மலையக தமிழர் பிரச்னை பேசப்படவில்லை என்று கூறியபடி, போட்டியில் களம் இறங்கி உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
தமிழ்ப் பொது வேட்பாளர் அறிவிப்பில், மலையக தமிழர்களை கருத்தில் கொள்ளாததாலேயே தாம் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியதாக சொல்லும் அவரது வருகையால், மலையகம் உள்ளிட்ட நாட்டின் தென் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தமிழ் கட்சிகளின் ஆதரவு, ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு சாதகமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.