செய்திகள்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக பாலியல் வன்கொடுமை புகாரில் கைது

சிட்னி, நவ. 6–

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக இதுவரை 47 ஒருநாள் போட்டிகளிலும், 46 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்த இரு வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ள ஆல் ரவுண்டரான தனுஷ்கா குணதிலகா, இலங்கை அணியின் பல்வேறு வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இதனால் டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்க இருந்த இலங்கை அணியில் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக ஆஸ்திரேலியா வந்த அவர், இலங்கை அணியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் தொடரின் இடையே குணதிலகாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.

இவருக்கு பதிலாக இலங்கை அணியில் பண்டாரா அணியில் சேர்க்கப்பட்டார். காயம் அடைந்தாலும் அவர் இலங்கைக்கு திரும்பாமல் அணியுடனேயே இருந்தார். இலங்கை அணிக்கு உற்சாகமளிக்கும் வகையில் அணியுடன் தொடர்ந்து பயணித்தும், வீரர்களுக்கு உதவியாகவும் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று சிட்னியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இந்தப் போட்டிக்கு பின்னர் இலங்கை அணியின் தனுஷ்கா குணதிலகா சிட்னி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனுஷ்கா குணதிலகா மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்ததாக போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை அவரது கைது பற்றி, இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அதில் பெயர் குறிப்பிடாமல் இலங்கையைச் சேர்ந்தவர் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளது. மேலும், “சிட்னியில் கடந்த வாரம் 29 வயது இளம் பெண் ஒருவர் ரோஸ் பே என்ற இடத்தில் அவரது வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 31 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். கைதான நபரும் புகார் கொடுத்த பெண்ணும் ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமாகி பேசி வந்துள்ளனர். இந்நிலையில் நவம்பர் 2 ஆம் தேதி மாலையில் இந்த வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளதாக புகார் பதிவாகியுள்ளது. குற்றம் நடந்த இடத்தில் சிறப்புப் போலீஸார் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே தனுஷ்கா குணதிலகா இல்லாமலேயே இலங்கை அணி சொந்த நாடு திரும்யுள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *