கொழும்பு, ஆக. 21–
இலங்கை அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் செலவிடும் தொகைக்கு முதன்முறையாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு
, ரூ.187 கோடி வரையில் செலவளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 42 ஆண்டு கால இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகமானோர் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது இதுவே முதல்முறை. இந்நிலையில் தேர்தலில் வேட்பாளர்கள் செலவிடும் தொகைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.187 கோடி செலவளிக்க அனுமதி
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவுகள் ஒழுங்காற்று சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசிதழில் கூறப்பட்டுள்ளதாவது:–
இந்தத் தேர்தலில் பிரசாரத்துக்காக நாடு முழுவதும் வேட்பாளர் ஒவ்வொருவரும் வாக்களருக்கு அதிகபட்சமாக தலா ரூ.109 வரை செலவழிக்க அனுமதிக்கப்படுகிறது. அதன்படி, ஒரு வேட்பாளர் மொத்தம் ரூ.186.83 கோடி வரை செலவழிக்கலாம்.
இதில் 60 சதவீதத்தை வேட்பாளர்கள் தங்கள் சொந்த நிதியிலிருந்தும் 40 சதவீதம் கட்சிகளிடமிருந்து பெற்றும் செலவழிக்கலாம். தேர்தல் முடிந்து 21 நாள்களுக்குள் இதற்கான செலவுக் கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.