செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தலில் இழுபறி: அனுரா குமார திசநாயகே, சஜித் பிரேமதாசா இடையே கடும் போட்டி

Makkal Kural Official

2ம் சுற்று விருப்ப வாக்கு எண்ணிக்கை துவங்கியது

முன்னாள் அரசியல் தலைவர்கள் வெளிநாடு தப்பியோட்டம்

கொழும்பு, செப். 22–

இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா திசநாயகே, சஜித் பிரேமதாசா இடையே இழுபறி ஏற்பட்டு உள்ளது. இதனால் 2–ம் சுற்று விருப்ப வாக்கு எண்ணிக்கை துவங்கி உள்ளது.

இலங்கையின் 9வது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திசநாயக்க, அரியநேத்திரன் பாக்கியசெல்வம், நமல் ராஜபக்ச உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

இலங்கையில் 1.70 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவானது. நேற்று மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.

தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே முன்னிலை பெற்றார். சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.) 2-வது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்கே 3வது இடத்திலும் பின்தொடர்ந்தனர்.

ஒரு கட்டத்தில் அனுரா குமார திசநாயகே பெற்ற வாக்குகள் 50 சதவீதத்தை தாண்டியது. இதனால் அவர் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால் 11 மணிக்கு பிறகு நிலவரம் சற்று மாறியது. அனுரா குமார திசநாயகே வாக்கு சதவீதம் படிப்படியாக சரிந்தது. சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் அதிகரிக்கத் தொடங்கியது

50 சதவீதம் பெற்றால் மட்டுமே வெற்றி

இன்று மதியம் 1 மணி நிலவரப்படி அனுரா குமார திசநாயகே 39.52 சதவீத வாக்குகளும், சஜித் பிரேமதாசா 34.28 சதவீத வாக்குகளும் பெற்றனர். ரணில் விக்கிரமசிங்கே 17.41 சதவீத வாக்குகளே பெற்று 3வது இடத்திலும், தமிழ் வேட்பாளர் அரியநேத்திரன் 4.07 சதவீதம், நமல் ராஜபக்சே 2.38 சதவீத வாக்குகள் பெற்று 4வது மற்றும் 5வது இடத்தில் இருந்தனர்.

இலங்கையைப் பொருத்தவரை 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாவிட்டால், வாக்கு எண்ணிக்கை அடுத்த சுற்றுக்கு நகரும். 50 சதவீத இலக்கை எட்டுவதற்கு கடும் போட்டி நிலவுவதால் தற்றுத் 2வது சுற்று வாக்கு எண்ணிக்கை துவங்கி உள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக…

இலங்கையில் வாக்காளர்கள் அளிக்கும் தரவரிசை வாக்களிப்பை அடிப்படையாக வைத்து அதிபர் தேர்வு செய்யப்படுவார். அதிபர் பதவிக்காக வாக்காளர்கள் 3 வேட்பாளர்களை தங்கள் முன்னுரிமையாக வரிசைப்படி குறிப்பிடலாம். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் வாக்குச்சீட்டில் முதல் விருப்பத்தேர்வாக வாக்காளர்கள் குறிப்பிட்டிருக்கும் வேட்பாளர்கள் பெயர்களே கணக்கில் எடுக்கப்படும். முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெறவில்லை எனில், அதிக வாக்குகள் பெற்ற முதல் 2 வேட்பாளர்களைத் தவிர அனைத்து வேட்பாளர்களும் நீக்கப்படுவார்கள். பின்னர் நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குகளில், வாக்காளர்கள் 2வது விருப்பத் தேர்வு வாக்குகள் எண்ணப்படும். அந்த வாக்குகள், ஏற்கனவே முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 வேட்பாளர்களுக்கு இருந்தால் அவர்களுக்கு மறுபகிர்வு செய்யப்படும். அதிலும் முடிவு எட்டப்படவில்லை என்றால், வாக்காளரின் 3வது விருப்ப வாக்குகள் பரிசீலிக்கப்படும். 2 வேட்பாளர்களில் ஒருவர் முழுமையான பெரும்பான்மையை பெறும் வரை இவ்வாறு விருப்பத்தேர்வு வாக்குகளை எண்ணும் பணி நடைபெறும். இலங்கை தேர்தல் வரலாற்றில் இவ்வாறு விருப்ப வாக்குகள் எண்ணப்படவேண்டிய நிலை இதுவரை வந்ததில்லை.

1982-ம் ஆண்டு முதல் நடைபெற்ற ஒவ்வொரு அதிபர் தேர்தலிலும், முக்கிய கட்சிகள் அல்லது கூட்டணிகளின் வேட்பாளர் முதல் சுற்றிலேயே அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளனர். பெரும்பாலான வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சீட்டுகளில் ஒரு வேட்பாளரை மட்டுமே தேர்வு செய்கிறார்கள். தங்கள் இஷ்டப்படி முன்னுரிமை அடிப்படையில் பல வேட்பாளர்களை வரிசைப்படுத்தலாம் என்பதை பல வாக்காளர்கள் அறியாமல் இருந்திருக்கலாம், அல்லது அந்த தனிச்சிறப்பு வசதியை பயன்படுத்த வேண்டாம் என்று விட்டிருக்கலாம். பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது பலமுனைப் போட்டி நிலவுவதால், இழுபறி நீடிக்கிறது. எனவே, முதல் முறையாக விருப்பத் தேர்வு வாக்குகள் மூலம் வேட்பாளரின் வெற்றி தீர்மானிக்கப்பட உள்ளது.

வெளிநாடுகளுக்கு தப்பியோட்டம்

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை துவங்குவதற்கு முன்னரே அந்நாட்டு அரசியல்வாதிகள் சிலர் அங்கிருந்து கிளம்பி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் சுசாந்தா புன்சினிலமே நேற்று மதியம் அந்நாட்டு நேரப்படி 2.25 மணிக்கு சென்னை கிளம்பினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவின் மாமனார் மற்றும் சில உறவினர்களும் இலங்கையில் இருந்து கிளம்பி வெளிநாட்டிற்கு பறந்தனர்.

சில புத்தமத துறவிகளும் வெளிநாட்டிற்கு கிளம்பியதாக கூறப்படுகிறது. அனைவரும் கொழும்புவில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கிளம்பினர்.

ரணில் விக்ரமசிங்கே

தோல்வியை ஏற்றுக்கொள்வதாக தேர்தலில் போட்டியில் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இதுவரை மக்களால் தேர்வு செய்யப்படாத அதிபரான ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஒருமுறை தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச, மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக நாட்டைவிட்டு வெளியேறினார். இதையடுத்து, அவருக்குப் பதில் ரணில் விக்ரமசிங்கே அதிபராக பதவியேற்றார். இதுவே அவரது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ராஜபக்சக்களை காப்பாற்றியதற்காகவே தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்ததாக தென்னிலங்கை மக்களில் பலரும் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *