நாடும் நடப்பும்

இலங்கையுடன் உறவுகளில் புதிய அத்தியாயம்

ரூ.123 கோடி உதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு, தலைவர்கள் வரவேற்பு


ஆர். முத்துக்குமார்


இலங்கையில் ஏற்பட்டுள்ள குளறுபடியான சூழலில் நெருக்கடியை சமாளிக்க புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் மகிந்த ராஜபக்சவின் இலங்கை பொதுஜன பெரமுன தலைமையிலான இலங்கா மக்கள் சுதந்திர கூட்டணிக்கு 143 எம்.பி.க்கள் உள்ளனர். இதற்கு அடுத்து ஐக்கிய மக்கள் சக்திக்கு 54 எம்.பி.க்கள் உள்ளனர்.

அரசுக்கு எதிரான போராட்டங்களை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்னின்று நடத்தி வருகிறார். பிரதமர் பதவியை ஏற்க அதிபர் கோத்தபய ராஜபக்சவிடம் அவர் சில நிபந்தனைகளை விதித்தார். குறிப்பிட்ட கால வரம்புக்குள் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும். அதிபர் அதிகார நடைமுறையை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை சஜித் பிரேமதாசா விதித்திருந்தார்.

இவற்றை ஏற்காத கோத்தபய ராஜபக்ச, மிதவாதியான ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க காய் நகர்த்தினார். ரணில் பிரதமராக இருந்தால் தனது குடும்பத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படாது. குறிப்பாக அண்ணன் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியும். தனது பதவிக்கும் ஆபத்து ஏற்படாது என்பது அதிபரின் கணக்கு.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை பலவீனப்படுத்த அந்த கட்சியின் 25 எம்.பி.க்களை இழுக்க அதிபர் கோத்தபய தீவிர முயற்சி செய்து வருகிறார்.

போராட்டத்தை ஒடுக்க அதிபர் கோத்தபய திரைமறைவில் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். எனினும் மக்களின் ஒட்டுமொத்த கோபமும் ராஜபக்ச குடும்பத்தின் மீது திரும்பியிருப்பதால் அந்த குடும்பத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாகவே உள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஏற்கெனவே 5 முறை இலங்கை பிரதமராக பதவி வகித்துள்ளார். நெருக்கடியான நேரத்தில் தற்போது 6-வது முறையாக பிரதமராகியுள்ள அவர் நாட்டை திறம்பட வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் பல்வேறு பொருளாதார சிக்கல்களால் விலைவாசி உச்சத்தில் இருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் நலனுக்காக ரூ.123 கோடி நிதி உதவியை அவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது இலங்கை தமிழர்களுக்கு என்றில்லாமல் இலங்கை மக்களுக்கு என்ற அறிவிப்பு ஸ்டாலினின் உண்மையான திட்டம் அந்நாட்டு மக்களுக்கு உதவுவதே என்பதை அடிகோடிட்டு காட்டுவது போல் தான் இருக்கிறது.

இந்திய, இலங்கை ராஜாங்க தொடர்புகளை முழுவீச்சில் புதுப்பிக்க இந்திய தரப்பில் இது முதல் அடி என்று பார்த்தால் ஸ்டாலினின் இந்த அறிவிப்பை இலங்கை மக்கள் மட்டுமின்றி உலக தலைவர்களும் பாராட்டி வரவேற்கின்றனர். இலங்கை அரசியல் கட்சிகளும் எல்லா மத தரப்பினரும் இவ்வறிவிப்பை மனம் திறந்து பாராட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.