செய்திகள்

இலங்கையில் 42 எம்பிக்கள் தனித்து செயல்பட முடிவு

கொழும்பு, ஏப். 5–

இலங்கையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட 42 எம்.பி.க்கள் தனித்து செயல்பட முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம், அமைச்சரவை மாற்றியமைப்பு, அரசுக்கான ஆதரவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் திரும்பப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பான சூழலில் இலங்கை நாடாளுமன்ற கூட்டம் இன்று தொடங்கியது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அனைத்து அமைச்சா்களும் ராஜிநாமா செய்த நிலையில், காபந்து அரசில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்கும் வகையில் புதிய அமைச்சரவை அமைக்க அதிபா் கோத்தபய ராஜபட்ச நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், இந்த அழைப்பை ஏற்க முக்கிய எதிா்க்கட்சியான சமகி ஜன பலவெகய (எஸ்ஜேபி) உள்ளிட்ட கட்சிகள் மறுத்துவிட்டன. அதிபரும், பிரதமரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்; அதற்கு எதிராக நாங்கள் செயல்பட முடியாது என எஸ்ஜேபி கட்சி தெரிவித்தது.

42 எம்பிகள் தனித்து செயல்பட முடிவு

பரபரப்பான சூழலில் இன்று இலங்கை நாடாளுமன்றம் கூடிய நிலையில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த 12 எம்.பிக்கள் உள்பட 42 பேர் தனித்து செயல்பட முடிவு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, இன்று அவைத் தலைவரிடம் தான் உள்பட ஸ்ரீ லங்கா சுதந்திரா கட்சியைச் சேர்ந்த 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்து செயல்படப்போவதாக அறிவித்தார். அதுபோல, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சா உள்பட 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்து செயல்பட முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார்.

அதேவேளையில், ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனித்து செயல்படுவதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக, பரபரப்பான சூழலில் இலங்கை நாடாளுமன்றம் கூடிய நிலையில், துணை அவைத் தலைவர் ரஞ்சித் தனது பதவியை ராஜிநாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.