செய்திகள்

இலங்கையில் மீண்டும் தமிழிலும் தேசிய கீதம்: அதிபர் ரணில் முடிவு

கொழும்பு, ஆக. 18–

இலங்கையில் மீண்டும் சிங்களத்திலும், தமிழிலும் தேசிய கீதம் பாடப்படும் என ரணில் விக்ரமசிங்கே அரசு அறிவித்துள்ளது.

இலங்கையில் 1949-ல் சுதந்திர தினத்தில் சிங்களத்திலும் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது நல்லதம்பி என்பவர் சிங்கள கீதத்தைத் தமிழில் மொழி பெயர்த்திருந்தார். 1956 இல் சிங்களம் மட்டும் பாடினால் போதும் என்ற சட்டம் வந்த பின்னும் 1987 வரை இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. பின்னர் தமிழ் மொழியில் பாடப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து, 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு பின் இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகளின் ஒரு படியாக சிங்களத்தில் இசைத்து வந்த தேசிய கீதம், தமிழிலும் பாடி இசைப்பதற்கு மீண்டும் நடைமுறைக்கு வந்தது.

ராஜபக்சேக்கள் தடை

2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோதபாய ராஜபக்ச வெற்றி பெற்றார். ஐ.தே.முன்னணி அரசுக்கு, பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப்பலம் இருந்த பொழுதிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியிலிருந்து விலகினார். அதன் காரணமாக மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பின்னர் பிப்ரவரி 4-ந்தேதி சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டும் பாடவும் இசைக்கவும் வேண்டும் என அறிவித்தது.

இந்நிலையில், இலங்கையில் சிங்களம் மற்றும் தமிழில் தேசிய கீதத்தை பாடுவதற்கு மீண்டும் அந்நாட்டு அரசு முடிவு எடுத்துள்ளது. சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்படும் என ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு பின்னர் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தை நிறுத்துவதற்கு இலங்கை நகர்ந்துள்ள நிலையில், இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.