செய்திகள்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி: 2 குழந்தைகளுடன் ராமேஸ்வரம் வந்த தம்பதியினர்

ராமேஸ்வரம், ஏப்.8–

இலங்கையில் கடுமையாக பொருளாதார நெருக்கடி காரணமாக தம்பதியினர் 2 குழந்தைகளுடன் தனுஷ்கோடிக்கு படகு மூலம் வந்தடைந்தனர்.

இலங்கையில் கடுமையான நெருக்கடி காரணமாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு, பல மணிநேரம் மின்தடை, எரிபொருட்கள் கிடைக்காமல் தவித்து வரும் நிலை எற்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன் 2 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் படகு மூலம் தனுஷ்கோடி வந்தடைந்தனர். அனைவரும் மண்டபம் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தனி வீடு வழங்கப்பட்டு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலையில் தனுஷ்கோடியில் இலங்கையை சேர்ந்த தம்பதியினர் வந்திருப்பதாக மீனவர்கள் தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை ஆய்வாளர் கனகுராஜ் இலங்கை தம்பதியினரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் இலங்கை தலைமன்னார் மாவட்டம் முத்தரிப்பு துறை பகுதியை சேர்ந்த அந்தோணி நிஷாந்த் பெர்ணடோ (34), இவரது மனைவி ரஞ்சிதா (29), மகள் ஜெனஸ்ரீகா (10), மகன் ஆகாஷ் (இரண்டரை வயது) யாழ்பாணத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் யாழ்பாணத்தில் கடுமையாக உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு, பல மணிநேரம் மின்தடை, எரிபொருள் கிடைக்காத நிலையால் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இதனால் அங்கிருந்த தலைமன்னார் வந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்ததாக தெரிவித்தனர்.

இலங்கையில் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக பட்டினி சாவு ஏற்படும் நிலை உருவாகி வருவதாக உருக்கமாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.