அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு
இலங்கை, ஜூலை 26–
இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21 ந்தேதி நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி புரட்சி செய்தனர். இதனை தொடர்ந்து அப்போது இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். மேலும், தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்று கொண்டார்.
செப்டம்பர் 21 இல் தேர்தல்
தற்போது, அதிபராக இருக்கும் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 17 ந்தேதியில் இருந்து அக்டோபர் 16-ம் தேதிக்குள் நடத்தப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பின்னர் அந்த தேதி உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், தேர்தல் நடைபெறும் புதிய தேதியை இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது. இலங்கையில் செப்டம்பர் 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், ஆகஸ்ட் 15 ந்தேதி முதல் இந்த தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நடைபெற இருக்கும் இந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவும், இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.