நாடும் நடப்பும்

இலங்கையில் சீர்திருத்தங்கள்!


ஆர். முத்துக்குமார்


இலங்கையில் புதிய தலைவர்கள் பதவி ஏற்று விட்டனர் அல்லவா? இனி அங்கு பொருளாதாரம் மேம்படுமா? சகஜ நிலைக்கு விரைவில் திரும்புமா? என்ற கேள்வி எழத் துவங்கிவிட்டது.

ஜனாதிபதியாக ரணில் விக்ரம சிங்கேவும் பிரதமராக தினேஷ் குணவர்த்தசேனவும் பதவி ஏற்ற பிறகு அந்நாட்டு அதிபர் மாளிகையும் பிரதமர் இல்லமும் அவர்களது அதிகாரப்பூர்வ அலுவலங்களும் 100 நாட்களுக்குப் பிறகு செயல்பட திறக்கப்பட்டிருக்கிறது.

பள்ளிகள், இதர அலுவலகங்களும் மீண்டும் திறக்கப்பட ராணுவமும் காவல்துறையும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

ராஜினாமா செய்து ஆட்சிப் பொறுப்பில் இருந்து வெளியேறிய கோத்தபய ராஜபக்சே தேர்தல் நேரத்தில் 2019ல் தந்த உறுதிமொழியில் இலங்கையில் 2025 ல் தனிநபர் வருவாய் 6500 டாலராக உயர்த்துவேன் என்று கூறியிருந்தார். அவரது 2 ஆண்டு ஆட்சியின் போது தனிநபர் வருவாய் 4000 டாலராகவே இருந்தது. ஆனால் கடந்த 3 மாதங்களில் பொருளாதார வீழ்ச்சி 6% வீழ்ந்து படுபாதாளத்தில் இருக்கிறது.

இன்றுள்ள நிலையில் அந்நாட்டில் புதிதாக 8 லட்சம் ஏழைகள் உருவாகியிருப்பது வேதனைக்குரியதாகும்.

கொரோனா பெரும்தொற்று உள்ளூர் அரசியல் சிக்கல்கள் என அடிமேல் அடி வாங்கிக் கொண்டிருக்கும் அத்தீவில் பொருளாதாரச் சரிவைக் கட்டுப்படுத்த புதிய தலைமை வெற்றி பெறுமா?

மும்முனை முயற்சிகளை மேற்கொள்ளத் திட்டங்கள் முன்வைத்து வருகிறார்கள். உடனடியாக 3.5 பில்லியன் டாலர் கடனை சர்வதேச நிதியகத்திடம் எதிர்பார்க்கிறது.

அது கிடைத்தாலும் உள்ளூர் வரிகள் மற்றும் சேவைகளின் விலைகள் கடுமையாக உயரும் அபாயம் உள்ளது.

இந்தக் கடன் சிக்கலில் இருந்து ஓரளவு தப்பிக்க இலங்கை விரையில் நட்பு நாடுகளிடம் நிதி உதவி கோரும். இந்தியா உதவிக்கரம் நீட்டும் என்பது உறுதி.

மேலும் வர்த்தக கொள்கைகளில் தளர்வு மிக அவசியம் தேவைப்படுகிறது. அரசு ஒப்புதல்களுக்கு தாமதம் இனி இருக்காது. உடனுக்குடன் உரிய உத்தரவுகள் வரவேண்டும். அது வர்த்தகத்தை வளர்க்க நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தும். இதற்கு அந்நாட்டு அரசுடமை நிறுவனங்களில் ஊழியர் சங்கங்களும் உதவிட வேண்டும்.

ராஜினாமா செய்த ஜனாதிபதி, பிரதமர் நடத்திய ஆட்சிக் காலத்தில் இருந்து ஊழல்கள், குடும்பத்தாருக்கு ஓரவஞ்சனை போன்ற தவறுகள் நடைபெறுவது தடுக்கப்பட வேண்டும். வெற்றி பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேலும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய காலக்கட்டம் இது.

ஆசியாவில் பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சிகளின் பின்னணியில் இருக்கும் தவறுகளை இலங்கை நடக்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெற்றிச் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும் தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளில் உள்ள நல்ல அம்சங்களை பின்பற்றினால் இலங்கையில் மறுமலர்ச்சி உறுதிபடும்.


Leave a Reply

Your email address will not be published.