சென்னை, ஜன.19-
இலங்கைக்கு இந்திய அரசின் பொருளாதார உதவி திட்டத்தின்கீழ், பஸ்கள் வாங்குவதற்கு இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி கடனுதவி அளித்துள்ளது.
அதன் மூலம், இலங்கை போக்குவரத்து வாரியத்துக்கு 500 பஸ்களை இந்துஜா குழுமத்தின் அசோக் லேலாண்டு நிறுவனம் வழங்குகிறது.
அதில் முதல்கட்டமாக 75 பஸ்களை அந்நாட்டு போக்குவரத்து மந்திரி பந்துல குணவர்த்தனவிடம் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே வழங்கினார்.
இதுதொடர்பாக அசோக் லேலாண்டு நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடுகள் தலைவர் அமன்தீப் சிங் கூறுகையில், ‘ஏற்கனவே இலங்கை போக்குவரத்து வாரியத்தில் எங்கள் நிறுவனத்தின் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. தற்போது புதிதாக வழங்கப்பட்டுள்ள 32 இருக்கை பஸ்கள், அந்நாடு முழுவதும் கிராமப்புற வழித்தடங்களில் இயக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
அசோக் லேலாண்டு பஸ்களும், லாரிகளும் இலங்கையிலேயே ‘லங்கா அசோக் லேலாண்டு’ என்ற பெயரில் தயாரிக்கப்படுகின்றன. அன்றாட போக்குவரத்துக்கு உதவுவதால் அவை அந்நாட்டு மக்கள் மத்தியில் நன்கு பிரபலமாகி உள்ளன’ என்றார்.