சிறுகதை

இலக்கியத் தீபாவளி! |சின்னஞ்சிறுகோபு

தீபாவளி முடிந்து ஐந்தாறு நாட்களாகி விட்டது. தமிழகத்தில் கொரோனாவும் குறைந்துக் கொண்டு இருந்தது.

சென்னை புறநகர் பகுதியான ராஜகீழ்பாக்கத்தில் வசிக்கும் எட்டாவது படிக்கும் வெங்கடேஸ்வரன் தனது நண்பன் கிருஷ்ணமூர்த்தியை பார்க்க சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அவனது வகுப்பு நண்பன் கிருஷ்ணமூர்த்தி மாடம்பாக்கம் என்ற பக்கத்து ஊரில்தான் இருந்தான். ஒரு கிலோ மீட்டர் தூரம்தான். கால் மணி நேரத்தில் போய்விடலாம். மறக்காமல் மாஸ்கை எடுத்து முகத்தில் மாட்டிக்கொண்டு சைக்கிளை மிதித்தான்.

வெங்கடேஸ்வரன் மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயிலைக் கடந்தபோது அந்தக் ராஜகோபுரமே இல்லாத கோவிலைப் பார்த்து, ‘கோபுரம் கட்டுவதற்குள் அந்த ராஜா செத்துப் போயிட்டார் போலிருக்கு’ என்று நினைத்துக் கொண்டான்!

அடுத்த நிமிடமே ‘படா’ரென்று ஒரு சத்தம்!

‘அட, இன்னுமா வெடி வெடிக்கிறார்கள்’ என்று அவன் நினைத்தபோது, சைக்கிள் நகராமல் தடுமாற ஆரம்பித்தது!

‘அவனது சைக்கிளும் ‘டியூப்’பை வெடித்து, லேட்டாக தீபாவளி கொண்டாடியிருப்பது’ அப்போதுதான் வெங்கடேஸ்வனுக்கு புரிந்தது!

நல்லவேளையாக அருகிலேயே ஒரு சைக்கிள் கடை இருந்ததால் சைக்கிளை அங்கே பஞ்சர் ஒட்ட சொல்லிவிட்டு நண்பன் கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்குச் சென்றான் வெங்கடேஸ்வரன்.

அங்கே கிருஷ்ணமூர்த்தி கை விரலில் கட்டுடன் உட்கார்ந்திருந்தான்!

அவனைப் பார்த்ததும் கிருஷ்ணமூர்த்தியின் அம்மா வந்து, அவனைப் பற்றி புலம்ப ஆரம்பித்தார்கள்.

“பாருடா வெங்கு! உன் நண்பன் இந்த தீபாவளிக்கு செய்த வேலையையெல்லாம்! அவன் பட்டாசு ஆசையால் மூவாயிரம் ரூபாய்க்கு பட்டாசுகள் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கினான். தீபாவளிக்கு இரண்டு நாளைக்கு முன்பு, மழை பெய்ததே அன்று இரவு , வீட்டுக்குள் பலகாரம் செய்த விறகு அடுப்புக்கு அருகே, பட்டாசுகளை காய வைக்கிறேன் என்று ஓரமாக வைத்தான்!”

“அதில் எப்படியோ தீப்பொறி பட்டு, பட்டாசுகள் வீட்டுக்குள்ளேயே வெடிக்க ஆரம்பித்தது. அதனால் ஒரே ரகளையாக போய்விட்டது. இந்த தெருவே ‘என்னவோ, ஏதோ’ வென்று பார்த்தது. நல்லவேளை அதில் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை. பெரிய சேதமும் இல்லை! சமையலறையிலிருந்து மைசூர்பாகு இருந்த தட்டு மட்டும் பறந்து வந்து கூடத்தில் ‘தொப்’பென்று விழுந்தது. அதில் ஒரு மைசூர்பாகும் உடையவில்லை!”

“அந்த சமையலறையிலும் கொஞ்சம் வெடிதான் வெடித்திருந்தது. மீதி வெடியை தீபாவளிக்கு வெடிக்கிறேன் என்று வெடித்தான். அதில் அவன் கொளுத்திய ஒரு ராக்கெட் வெடி, கொல்லைப்பக்கம் பறந்துப் போய், மாட்டுக்கு வைத்திருந்த வைக்கோல் போரில் விழுந்து, வைக்கோல் போரே தீப்பிடித்து எரிந்து விட்டது. நல்லவேளை அதில் வைக்கோலும் கொஞ்சமாக இருந்ததால் ஆபத்தில்லாமல் போச்சு! அதன்பிறகு ஒரு லெட்சுமி வெடியை கையில் பிடித்துக் கொண்டே கொளுத்தி எறிகிறேன் என்று எறிய நினைத்திருக்கிறான். அதை அவன் தெருவில் எறிவதற்குள் கையிலேயே வெடித்து விட்டது. அந்த லெட்சுமியின் அனுக்கிரஹத்தால் தானவோ என்னவோ, விரலில் இவனுக்கு சிறிய காயத்தோடு போச்சு! அது சரி நீ தீபாவளில என்னடா செய்தாய்?” என்று கிருஷ்ணமூர்த்தியின் அம்மா கேட்டார்கள்.

வெங்கடேஸ்வரன் உற்சாகத்துடன் சொல்ல ஆரம்பித்தான்.

“தீபாவளிக்கு முதல் நாள் காலையில் எங்கள் தெருவிலிருக்கும் திருவள்ளுவர் படிப்பகத்திற்கு சென்றிருந்தேன் அம்மா.”

“அங்கே ஒரு நாளிதழைப் புரட்டியபோது அதில் அதன் ஆசிரியர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.’

“அதில் வெடிச்சத்தத்தால் ஏற்படும் ஒலி மாசால் பறவைகள், உயிரினங்கள் பாதிக்கப்படுவதைப் பற்றியும் பட்டாசு-வாண வேடிக்கைகளில் உள்ள வேதிப் பொருள்களால் ஏற்படும் காற்று மாசால் வெடிக்கு அருகில் உள்ள மனிதர்களுக்கு மூச்சுத் தினறல்,ஆஸ்துமா, கண்களில் எரிச்சல், தோல் அழற்சி போன்றவை ஏற்படுவதுடன், அவைகள் கோவிட்-19 நோயையும் அதிகரிக்கும் என்றெல்லாம் விரிவாக எழுதியிருந்தார். அதோடு அதனால் பசுமைப் பட்டாசு என அழைக்கப்படும் புகை குறைந்த, மாற்று வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளைப் பயன்படுத்த வேண்டும். முறையாகக் கைகளைக் கழுவி, முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியுடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.”

“இதைப் படித்த நான் அந்த பத்திரிக்கை ஆசிரியர் எழுதியிருந்த அறிவுரைபடி நடக்க வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டேன். அதனால் பட்டாசுக்கு என்று ஒதுக்கியிருந்த பணத்தில் நல்ல தரமான பட்டாசுகளை அதிகம் வாங்காமல் தேவையான அளவே வாங்கி, கவனத்துடன் வெடித்தேன். மீதியிருந்த பட்டாசுக்கான பணத்தில் சிறுவர்களுக்காக இந்த வருடம் 200 ரூபாயில் வெளிவந்திருக்கும் ‘பொம்மி’ என்ற சிறுவர் பத்திரிகையின் தீபாவளி மலரை வாங்கினேன். நிறைய கதைகள், கட்டுரைகள், பாடல்கள், விஞ்ஞான தகவல்களுடன் பயனுள்ள கலைக்களஞ்சியமாக வெளிவந்திருக்கும் அந்த தீபாவளி மலர் புத்தகம், எனது இந்த தீபாவளியை இலக்கிய தீபாவளியாகவும் மாற்றிவிட்டது!” என்றான் வெங்கடேஸ்வரன்.

அதைக்கேட்ட கிருஷ்ணமூர்த்தியின் அம்மா, ‘தனது மகனின் நண்பன் மிக நல்ல நண்பன்தான்’ என்று நினைத்தபடி எழுந்து அவனுக்காக தீபாவளி பலகாரங்களை எடுத்து வர சென்றார்கள்.

கிருஷ்ணமூர்த்தியோ வெங்கடேஸ்வரனை போல தானும் இனி சிந்தித்து நல்லவனாக நடக்க வேண்டும் முடிவு செய்து கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *