சிறுகதை

இலக்கியக்காதல் | ராஜா செல்லமுத்து

Spread the love

சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென்றெண்ணிப்

பிணைமான் இனிதுண்ண வேண்டிக் கலைமாத்தன்

கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்

உள்ளம் படர்ந்த நெறி.

– ஐந்திணை ஐம்பது

– மாறன் பொறையனார் (பாலைத்தினைப் பாடல்)

* * *

உத்ராயணக் காலம் (தை முதல் ஆனி வரை) .

தட்சணாயன காலம் ( ஆடி முதல் மார்கழி வரை)

என்ற இரண்டு காலங்களின் இடைவெளியில் ‘காதல்’ எப்போதும் காலம் மாறாமலே இருந்து வரும்.

* * *

உத்ராயணக்காலத்தில் வெந்து கொண்டிருக்கும் காதல், தட்சணாயன காலத்தில் குளிர்ந்து குவிந்து கிடக்கும்.

இந்த இரண்டு காலங்களை இதயத்தில் சுமந்து, காதல் வளர்த்த கார்க்கோடனும் கயல்விழியும் ஒரு தட்சணாயன காலத்தில் இருப்பிடத்திலிருந்து வெளியேற முடிவு செய்தனர்.

அரும்பிய காதல் இப்போது, வேர்விட்டு வளர்ந்திருந்தது. இரண்டு வீட்டார்களும் இதயக்காதலுக்கு இணைப்புத் தரவில்லை. துண்டிப்பையே தொடர்ந்து தந்து கொண்டிருந்தனர். இனிமேல் களவுக்காதல் கொள்ளலாகாது;

மணம் முடிப்பதே மேல் என்று எண்ணினர்.

கயல் விழி நம் திருமணம் இனி நடக்குமா? இருவரும் இணையாக வாழ முடியுமா? இச்சென்மத்தில் இது இயலாதென்றே எண்ணுகிறேன். நம் காதல் இன்றோடு நீர்த்துப்போவதாய் நினைக்கிறேன் என்று கார்க்கோடன் கண்ணீர் சிந்தினான்.

தலைவா தடுப்பதை உடைத்தால் நம்முடைய நினைவு நிறைவேறும் எதை உடைத்தால் எதைப்பெற முடியும் என்பது உங்களுக்கும் எனக்கும் தெள்ளத் தெளிவாகத் தெரியும். இனியும் தாமத்தித்தால் இரண்டு பேரும் சேரவே வாய்ப்பில்லை என்று கயல் விழி கண்ணீர் சிந்தினாள்.

என்ன செய்ய?

‘நீங்களே முடிவு செய்யுங்கள்’

‘இரண்டு பேரின் குடும்பங்களும் இணைய வாய்ப்பே இல்லை. அப்படியே இணைந்தாலும் நம்மைச் சேர்த்து வைக்கமாட்டார்கள், நீங்கள் எடுக்கும் முடிவுக்கு நான் தலைசாய்க்கிறேன்’என்று கயல் விழி கார்கோடனின் தோளில் சாய்ந்தாள்.

‘சரி’ இனியும் நாம் தாமதிக்க வேண்டாம் . இன்று இரவே முடிவு செய்வோம் ;’நீ காத்திரு’என்று சொல்லிச்சென்றான் காதலன்.

நட்சத்திரங்கள் பூத்திருக்கும் ராத்திரியில் இருவரும் ஊரைவிட்டுப்போக முடிவு செய்தனர்.

‘கார்கோடன் நாம சரியாதான் முடிவு எடுக்கிறோமா?’

‘ஆமா, இத விட்டா நமக்கு வேற வழிதெரியல. இத செஞ்சுதான் ஆகனும்.

‘உங்களுக்கு சரின்னா எனக்கும் சரி,

கயல்விழியும் பின்தொடர்ந்தாள்.

இருவரையும் பேசிய ஊர் உறங்கிக் கொண்டிருந்தது. பேசாத நாய்கள் உரக்க ஊளையிட்டுக் கொண்டிருந்தன.

கார்கோடன்

‘ம்’நாம் செய்த இந்தச் செயல் சரியா?

‘தெரியாது’

ஏன் இப்படிப் பேசுறீங்க?

மனசு ரெண்டையும் சேர விடாத மனுசங்கக்கிட்ட மனிதத்த எதிர்பார்க்க முடியாது.

நாம வாழனும்னா இப்படி செய்றதத் தவிர வேறு வழியே இல்ல’

பேசிக்கொண்டே இருவரும் முன்னேறினர்.

எங்கும் கும்மிருட்டு. ஆட்கள் நடமாடாத பாதை; கூடவே வரும் உச்சி நிலவு, உஷ்,உஷ் என்று வீசும் காற்று. இதைத்தவிர வேறொன்றும் அந்தப்பகுதியில் கேட்கவே இல்லை.

ஊர் கடந்து …  ஊரின் எல்லையை எட்டிய போது இரண்டு பேருக்குமான ஏக்கம் உயிர்வரை ஊடுருவியது. ஏக்கப் பார்வையோடு திரும்பிப் பார்த்தவர்கள்.

‘இனிமே நாம இங்க வரப்போவதில்லையே கயல்விழி’

‘ஆமா’

‘இன்னைக்கு தான் நம்மோட கடைசி நாள். உயிரோட வரமா? இல்ல இப்படியே போறமா? எதுவுமே நமக்கு தெரியாது ’ என்று இருவரும் ஏக்கதோடு அந்த ஊரைப்பார்த்துக் கொண்டிருந்தனர்.

எங்கோ வீசிய காற்று இருவரையும் தழுவிச்சென்று ஊருக்குள் ஊடுருவியது.

‘ம்’ இருவரின் உதடுகள் திறக்காமலே ‘ம்’ என்ற வார்த்தை மட்டுமே வெளிவந்தது.

‘சரி போகலாம்’

பாதங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படாமலேயே பாதையைத் தேர்ந்தெடுத்து நடந்தன.

கார்கோடன்

‘ம்’

நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணப்போறமா?

ஆமா’

சரி அப்படின்னா ரெண்டு பேரும் இந்த பூமியில் வாழ்வது எப்படி?

தெரியல’

ரெண்டு பேருக்கும் எந்த வேலையும் இல்லையே’

ம்’

கார்கோடனின் வார்த்தை வாய்க்குள்ளையே வற்றிப்போனது.

‘என்ன சொல்லுவாங்க’

‘கடவுள் விட்டப்படி,போய்ட்டே இருப்போம். விதிவழி விடும். நல்ல வாழ்க்கை பிறக்கும்;

நம்பிக்கை வார்த்தைகளை விதைத்தான் கார்கோடன்.

எங்க வீட்டுல நான் செல்லமா வாழ்ந்தேன்.

இனி அந்த வாழ்க்கை எனக்கு இனிமே வாய்க்காதா?

ஏன் அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல.கண்டிப்பா நான் உன்னை முன்ன மாதிரியே வாழவைத்து காப்பத்துவேன்.

நிஜமாகவா?

ஆமா’

நடந்து போய்க்கொண்டிருந்த கார்கோடனை ‘பசக்’ எனக் கட்டிக்கொண்டாள் கயல்விழி. அவள் கண்களிலிருந்து கண்ணீர் மெல்லக்கசிந்தது.

ஏய், ஏய் இப்படி? சின்னப்புள்ள மாதிரி. வேண்டாம்.

விரல்களால் விழியிலிருந்து வரும் கண்ணீரைத் துடைத்து விட்டான் கார்கோடன்.

கயல் உன்னை உயிரை விட பெருசா நினைப்பேன்.

அங்க பாத்தியா?

என்று நடுக்காட்டில் நடந்த நிகழ்வுகளை சுட்டிக்காட்டினான்.

தூரத்திலிருந்து பார்த்தவளுக்கு அது தெளிவாகத் தெரியவில்லை.

இல்ல எனக்கு சரியாத் தெரியல

வா’ என்று கையோடு கூட்டிப் போனான்.

ஒரு மரக்கிளையில் இரண்டு குருவிகளின் இணை அங்கே இருந்தன. ஆண் குருவி தன் காலில் ஒரு பழத்தை கவ்விப் பிடித்திருந்தது. கொத்தித்தின்று கொண்டிருந்தன.

‘ரெண்டும் பழத்தைச் சாப்பிடுது. இதில் என்ன ஆச்சர்யம்’என்றாள் கயல்விழி

‘ம்’பாக்குறதுக்கு அப்படித்தான் தெரியும்.ஆனா அதுல இருக்கிற ஆண்குருவி,வெறுமனே கொத்திட்டு தான் இருக்கும் பழத்தை சாப்பிடாது என்றான் கார்கோடன்

‘ஏன்? அது சாப்பிடல? என்று கயல்விழி கேட்டபோது

‘அங்க தான் அன்பின் அடர்த்தியே இருக்கு என்று கார்க்கோடன் சொல்ல ‘

‘பழம் எவ்வளவு சின்னது.

‘ம்‘ இவ்வளவு சின்னப்பழத்த ரெண்டு பேரும் சாப்பிட்டம்னா ஜோடிக்குருவிக்கு வயிறு நிறையாதென்று தான் ஆண் குருவி பழத்த சாப்பிடல’ என்று கார்க்கோடன் சொன்னான்.

அதன் பிறகு தான் உற்று நோக்கினாள் கயல்விழி

பாத்தீங்களா?

‘ம்’

நீங்க பார்த்தது ஆண்குருவிய மட்டும் தான்.பெண் குருவியையும் கொஞ்சம் உற்றுப்பாருங்க’என்று கயல்விழி சொல்ல,பெண்குருவியை உற்று நோக்கினான் கார்கோடன்.

‘ஆமா’பெண் குருவியும் சாப்பிடல.சும்மா தான் ரெண்டும் கொத்திட்டு இருக்கு? என்று கார்கோடன் சொன்ன போது’

‘ஆமா’ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு விட்டுக்கொடுத்திட்டு இருக்கு.

ரெண்டும் பழத்த சாப்பிடல.ரொம்ப நேரமா பழம் அப்படியே தான் இருக்கு என்று இருவரும் நினைத்த போது.

‘நாம ரெண்டு பேரும்’ அப்படித்தான் இந்த பூமியில வாழப்போறம் என்று கார்கோடன் சொன்ன போது காற்றுபுகாத அளவுக்கு கார்க்கோடனைக் கட்டிக்கொண்டாள் கயல்விழி.

குருவிகள் இரண்டும் காதலர்கள் இருவரையும் கவனமாகக் கூர்ந்து பார்த்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *