சிறுகதை

இறைவன் கொடுத்த வரம் – கவிஞர் திருமலை. அ

காயத்திரியும் அவளது கணவன் செல்வமும் வெவ்வேறு தனியார் வங்கிகளில் வேலை பார்க்கிறார்கள். வழக்கமாக மனைவியை பைக்கில் ஏற்றிக் கொண்டு அலுவலகத்தில் விட்டு விட்டு, தனது அலுவலகத்துக்கு செல்வம் பைக்கில் செல்வான்.

மாலையில் வரும் போது காயத்திரி பேருந்தில் வந்து விடுவாள். இப்படியே 15 வருடங்கள் ஓடிவிட்டன.மகள் 9-வது வகுப்பும் மகன் 6-வது வகுப்பும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே செல்வத்துக்கும் காயத்திரிக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. ஆனால் இப்போது அது பூதாகரமானது.

காயத்திரி வேலை பார்க்கும் வங்கிக்கு பாஸ்கர் என்ற இளைஞன் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்தான். அவனுக்கு திருமணம் ஆகவில்லை. அவனுடன் காயத்திரி நெருங்கிப் பழகுவது அலுவலகக் கண்களை அரிக்கத் தொடங்கியது.

அவன் அழகில் காயத்திரி மயங்கி விட்டாளோ? என்ற சந்தேகம் அலுவலகத்தில் எல்லோருக்கும் ஏற்பட்டது. மாலையில் வேலைமுடிந்ததும் இருவரும் ஓட்டலுக்கு செல்வதையும் பிறகு பஸ் ஸ்டாப் வரை வந்து பாஸ்கர் விடை பெறுவதையும் தனது நண்பன் மூலம் செல்வம் தெரிந்து கொண்டான்.

இது குறித்து காயத்திரியிடம் செல்வம் கேள்வி கேட்டான். நாங்கள் நண்பர்களாகவே பழகி வருகிறோம். அதில் எனக்கு நிம்மதி கிடைக்கிறது. இங்கே அது இல்லை என்று பதிலளித்தாள் காயத்திரி.

மறுநாள் மாலை காயத்திரியை பாஸ்கர் சந்தித்தான். அவனிடம், இனி நான் வர முடியாது. என் கணவர் சந்தேகப்படுகிறார். என்றாள் காயத்திரி. அதை நாம் உண்மையாக்கினால் என்ன? என்றான் பாஸ்கர். என்ன சொல்கிறீர்கள்? பதறியபடி கேட்டாள் காயத்ரி.

ஒரே ஒரு நாள் மட்டும் ஜாலியாக இருந்து விட்டு நாம் பிரிந்து விடலாம்; அதுதான் இருவருக்கும் நல்லது என்றான் பாஸ்கர். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த காயத்திரி, உன்னைக் கொலை செய்தாலும் செய்வேனே தவிர என் கணவனுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே பஸ் ஸ்டாப்பை நோக்கி விரைந்தாள். தூரத்துப் பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி என்பதை காயத்ரி இப்போது உணர்ந்து கொண்டாள். நல்லவன் என்று நினைத்து நட்பாகப் பழகினால், இவன் பொறுக்கியாக இருக்கிறானே? இந்த ஆண்களே இப்படித்தானா? என்று தனக்குள் பேசிக் கொண்டே பேருந்தை நோக்கி நடந்தாள் காயத்திரி. வீட்டுக்கு வந்த காயத்ரி, அவன் நட்பை முறித்து விட்டேன்; எனக்கு டைவர்ஸ் கொடுத்து விடுங்கள்; என் குழந்தைகளுடன் நான் நிம்மதியாக வாழ வேண்டும் என்று தன் கணவனிடம் கூறினாள். அவனும் உன் விருப்பம் என்று சொல்லி விட்டு வெளியே சென்றான். அடுத்த நாள் காலை தனது உறவுக்கார வக்கீலான பத்மநாபனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்த காயத்திரி, தனது டைவர்ஸ் பற்றி கூறினார். முதலில் சமரசம் செய்து பார்ப்போம் என்று வக்கீல் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் காயத்திரி கேட்கவில்லை. கோர்ட் சொல்வதை என் கணவர் நிச்சயம் கேட்பார். நாம் சொல்வதை எல்லாம் சட்டை செய்யமாட்டார் என்று வக்கீலுக்கு பதிலளித்தார் காயத்ரி. பிறகு ஒரு வழியாக வழக்குத் தொடர வக்கீல் சம்மதம் தெரிவித்தார்.முன் பணத்தையும் தேவையான தகவல்களையும் கொடுத்து விட்டு வெளியேறினார் காயத்திரி.

சில நாட்களில் காயத்திரிக்கும் செல்வத்துக்கும் கோர்ட்டில் இருந்து சம்மன் வந்தது. குறிப்பிட்ட நாளில் இருவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். முதலில் செல்வம் அழைக்கப்பட்டார் செல்வம் கூண்டில் ஏறி நின்றார்.

நீதிபதி கேட்டார்;

உங்கள் மனைவி ஏன் விவாகரத்து கேட்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரியும்; அதில், தாம்பத்ய வாழ்க்கையில் முரண்பாடு இருப்பதாக கூறியிருக்கிறார். எனக்கு அது புரியவில்லை என்றார் செல்வம்.

உண்மையாகவா? செல்வத்திடம், நீதிபதி சற்று அழுத்தமாகவே கேட்டார். ஆமாங்க அய்யா என்று மெல்லிய குரலில் பதிலளித்தார் செல்வம்..

தொடர்ந்து காயத்ரி அழைக்கப்பட்டார். கூண்டில் ஏறிய காயத்ரியிடம் நீதிபதி கேட்டார்; பாஸ்கருக்கு என்ன பதில் உங்களிடம் இருக்கிறது?அதை இங்கே சொல்ல முடியுமா?

அய்யா, தனி அறையில் பதில் சொல்ல விரும்புகிறேன், என்றாள் காயத்ரி. மதிய இடைவேளை நேரத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் எனது அலுவல் அறையில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி அறிவித்தார்.

மதிய உணவுக்கு பின் நீதிபதி முன் ஆஜரான காயத்ரி, பேசத் தொடங்கினார்; அய்யா என் கணவர் என்னை ஒரு பெண்ணாகவே மதிப்பதில்லை. படுக்கை அறையில் என்னை ஒரு இயந்திரமாகவே பயன்படுத்துகிறார். அவர் விரும்பி, நான் விரும்பாவிட்டாலும் என்னை வலுக்கட்டாயமாக பணிய வைப்பார்.

ஆனால் நான் விரும்பும் போது, அவர் பக்கத்தில் நெருங்கினாலே, வேண்டா வெறுப்போடு என்னைத் தள்ளி விடுவார். இது வரை ஒரு நாள் கூட அவர் எனக்கு இணங்கியதில்லை. ஆனால் எல்லா நாளும் அவருக்கு நான் இணங்கி இருக்கிறேன்; காரணம், நான் மறுத்தால் தனது வெறித் தனத்தை என்னிடம் காட்டுவார்.

இந்த சித்திரவதை வாழ்க்கையை எத்தனை நாள் பொறுத்துக் கொள்வது? என்னால் முடியவில்லை. எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. அவரிடம் இருந்து எனக்கும் என் பிள்ளைகளுக்கும் விடுதலை தாருங்கள் என்று நீதிபதியிடம் கெஞ்சினாள் காயத்திரி.

பிறகு நீதிபதி செல்வத்தை அழைத்தார். அவரிடம் உங்கள் மனைவி சொல்வதெல்லாம் உண்மையா? என்று கேட்டார். அய்யா அவர் சொல்வது அனைத்தும் உண்மை; என்னை மன்னித்து விடுங்கள் என்றான் செல்வம்.

நீதிபதி தொடர்ந்தார்; உடலுறவு என்பது மனிதனுக்கு இறைவன் கொடுத்த வரம். இந்த விஷயத்தில் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை. மனைவி என்பவள் இயந்திரமல்ல; அவளையும் ஒரு பெண்ணாக மதிக்க வேண்டும். இல்லற வாழ்வில் கணவன் மனைவி இருவருக்கும் சம பங்கு அதிகாரம் உண்டு. யாரும் யாரையும் மிஞ்சி விட முயற்சிப்பது தவறு; இனியாவது செல்வம் தன் மனைவி மற்றும் பிள்ளைகளைப் புரிந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்

இவ்வாறு நீதிபதி தன் கருத்தைச் சொல்லி முடித்துக் கொண்டார்.

செல்வமும் காயத்திரியும் சேர்ந்து வாழ இந்த கோர்ட் 3 மாத காலம் அவகாசம் அளிக்கிறது. அதன் பிறகு விவாகரத்து குறித்து முடிவு செய்யப்படும் என்று அறிவித்த நீதிபதி வாழக்கை மேலும் 3 மாதங்களுக்கு ஒத்தி வைத்தார்.

பிறகு தன் வக்கீலிடம் விடை பெற்றாள் காயத்திரி. அப்போது செல்வத்தையும் காயத்திரியையும் ஒரே ஆட்டோவில் அனுப்பி வைத்தார், வக்கீல் பத்மநாபன்.

வீட்டுக்கு வந்த இருவரிடமும் சில மாற்றங்கள் தெரியத் தொடங்கின. தன் அம்மாவிடம் சென்ற செல்வம், தனக்கு காயத்திரியை சாப்பாடு வைக்கும் படி சொல்ல சொன்னான். மகிழ்ச்சியோடு சென்ற செல்வத்தின் அம்மா, காயத்ரியிடம் தகவலைச் சொன்னார். காயத்திரியும் சம்மதித்தாள்.

மறுநாள் முதல் செல்வத்தோடு தினமும் பைக்கில் சென்று வந்தாள் காயத்திரி. வீட்டுக்கு வந்தும் தன் பிள்ளைகளிடம் பேசி மகிழ்ந்தான் செல்வம். காயத்திரியிடமும் தன் நெருக்கத்தை அதிகமாக்கிக் கொண்டான்.

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?

இப்படியே சில நாட்கள் மவுனமாய் நகர்ந்தன.

ஒரு விடுமுறை நாளில் எல்லோரையும் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றான் செல்வம்.

அன்றிரவு செல்வமும் காயத்திரியும் கட்டிலில் சற்று நெருக்கமாகவே படுத்திருந்தனர். அப்போது என்னை மன்னித்து விடு என்று காயத்திரியிடம் செல்வம் கூறினான். அவனை கட்டி அணைத்துக் கொண்டே, காயத்திரி சொன்னாள், என் மீதும் தவறிருக்கிறது நீங்களும் என்னை மன்னிக்க வேண்டும் என்றாள்.

அப்போது காயத்திரியை அலக்காகத் தூக்கி தன் மார்பில் சாய்த்துக் கொண்டான் செல்வம். இருவர் விழிகளும் மீன்களாய் துள்ளின. ஆசை வெள்ளம், கரை புரண்டது. அன்றிரவு முழுவதும் அன்பின் பரிமாற்றம். அதைத் தடுக்க யாராலும் முடியவில்லை.

மறுநாள் காயத்திரி தன் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள கணவருடன் சென்று வக்கீலைச் சந்தித்தார்.

மகிழ்ச்சி அடைந்த வக்கீல் தம்பதியர் இருவரையும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

பைக்கில் ஏறிய காயத்திரியின் இரு கைகளுக்குள்ளும் சிக்கிய செல்வம், வீடு வரை மண் புழுவாய் நெளிந்தான். வானம் கருத்தது; சாரல் விழுந்தது. குளிர் காற்று வீட்டுக்குள் துள்ளியது. கதவைத் திறந்த இருவரையும் கட்டிலறை காக்க வைக்கவில்லை; மீண்டும் வாரி அணைத்துக் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published.