சிறுகதை

இறையச்சம்-மலர்மதி

தோளில் மாட்டிய லெதர் பேக், கையில் ஒரு சிறிய சூட்கேஸ் சகிதம் கேட்டைத் திறந்து கொண்டு நுழைந்தான் யாசர்.

ஏராளமான செடிகளோடும் பரந்து விரிந்த பச்சைப் புல் தரையாலும் சூழப்பட் டிருந்தது அந்த பங்களா.

யாசர் தயங்கி நடந்தான்.

புல் தரையில் பிரம்பு நாற்காலி போட்டு காற்றோட்டமாய் அமர்ந்து தன் பால்ய காலத்து நண்பரான அண்ணாமலையுடன் உரையாடிக் கொண்டிருந்தார் ஷஹாபுத்தீன்.

நிழலாட நிமிர்ந்தவர் யாரோ ஓர் இளைஞன் தன்னை நோக்கி வருவதை உணர்ந்து பேச்சை நிறுத்திவிட்டுத் திரும்பினார்.

“அஸ்ஸலாமு அலைக்கும்.”

“வஅலைக்கும் ஸலாம். நீங்க..?”

“நான் குடியாத்தத்திலிருந்து வர்றேன். பேரு யாசர். வாப்பாத்தான் என்னை உங்களைப் பார்க்க அனுப்பிவெச்சார்.”

“அடடா… வகாருடைய மகனா நீங்க?”

“ஆமாம் சார்.”

“உக்காருங்க தம்பி.” என எதிர் இருக்கையைச் சுட்டிக் காட்டினார்.

“இவர் என் நன்பர் அண்ணாமலை.” என்று அறிமுகப்படுத்த அவருக்கும் வணக்கம் தெரிவித்தான் யாசர்.

சூட்கேசையும். பேக்கையும் தரையில் வைத்துவிட்டு அமர்ந்தான்.

“வகார் என் சிறு வயது நண்பர். நீங்க குழந்தையா இருந்தபோது உங்களை நான் பார்த்திருக்கிறேன். இப்ப வளர்ந்து நிக்கறீங்க. வகார் போன் பண்ணியிருந்தார். உங்களைப் பற்றியும் சொன்னார். என்ன படிச்சிருக்கீங்க?”

“கம்ப்யூட்டர் சைன்ஸ்ல டிகிரி வாங்கியிருக்கேன். வேலூர்ல ஒரு தனியார் நிறுவனத்துல வேலை கிடைச்சிருக்கு. வீட்டை விட்டு வெளியே வருவது இதுவே முதல் முறை. புது இடம். புது ஜனங்க. அதான் வாப்பா உங்களைப் பார்க்கச் சொன்னார்.”

“வேலூர் என்றதும் உங்க வாப்பாவுக்கு நான்தான் ஞாபகம் வந்திருப்பேன். ரொம்ப நல்லது. உங்களுக்காகவே ஓர் அறையை ஏற்பாடு செய்திருக்கிறேன்.” என்றவர், திரும்பி குரல் கொடுக்க, வேலைக்காரன் ஓடி வந்தான்.

-2-

“தம்பியைக் கூட்டிட்டுப்போய் மாடியில் ஏற்பாடு செய்த அறையைக் காட்டுங்க.” என உத்தரவிட்டுவிட்டு, “நீங்க போய் குளித்துவிட்டு ஓய்வெடுங்க. இவ்வளவு பெரிய பங்களாவுல நான் மட்டும் தனியா இருக்கேன். வேலைக்காரர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. அவ்வப்ப என் நண்பன் அண்ணாமலைதான் வந்து போவார். இப்ப நீங்க என் பேச்சுத் துணைக்குக் கிடைச்சிருக்கீங்க.” என்றார்.

“ரொம்ப நன்றிங்க.” என்றவாறு வேலைக்காரனைப் பின் தொடர்ந்தான் யாசர்.

யாசர் ஷஹாபுத்தீனின் பங்களாவில் தங்கி இருந்து வேலைக்குப் போய் வந்தான். காலை ஒன்பது மணிக்குப் போய் மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்புவான்.

அவனையும் அவனுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் இரு விழிகள் கூர்ந்து கவனித்து வருவது அவனுக்குத் தெரியாது.

அன்று ஞாயிற்றுக்கிழமை.

விடுமுறை தினம் என்பதால் யாசர் வீட்டிலேயே இருந்தான்.

வழக்கம்போல் ஷஹாபுத்தீனும் அண்ணாமலையும் புல் தரையில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அந்தப் பக்கம் வந்தான் யாசர்.

“வாங்க யாசர்…” என்று வரவேற்றார் அண்ணாமலை.

எதிர் நாற்காலியில் அமர்ந்தான்.

“என்ன தம்பி, வேலையெல்லாம் எப்படி போகுது?”

“ரொம்ப நல்லாவே போகுது சார்.”

“இந்த இடம் எப்படி? உங்களுக்குப் பிடிச்சிருக்கா?’

“ம். போகப் போகப் பழகிடும்னு நினைக்கிறேன்.”

“அலுவலகம் எப்படி?”

“நான் ஒருத்தன்தான் சார் முஸ்லீம். மத்த எல்லோரும் நான்முஸ்லீம்ஸ்.”

“ஓ… ஐ.ஸீ…”

“கேண்டீன்ல கூட வெஜ்தான். அசைவம் சாப்பிட்டுப் பழகிப்போன எனக்கு தினம் சைவம் சாப்பிட ஒரு மாதிரியாத்தான் இருக்கு. என்ன சார் செய்வது? ஒரே ஒரு முஸ்லீமுக்காக அவங்க நான்வெஜ் போடுவாங்களா என்ன?”

சிறிது நேரம் பொதுவான விஷயங்களை அலசிவிட்டு விஷயத்துக்கு வந்தார் அண்ணாமலை.

“ஏன் தம்பி.. அடிக்கொரு தரம் உங்களை ஒரு முஸ்லீம்னு சொல்லிக்கிறீங்களே எப்படி?”

திடுக்கிட்டன் யாசர்.

“சா..சார்… நீங்க என்ன சொல்றீங்க? நான் ஷஹாபுத்தீன் சாரோட நண்பர்

-3-

வகாருடைய மகன். என் பேரு யாசர். அப்படி இருக்க, நான் ஒரு முஸ்லீம் இல்லாம வேறு யாரு..?”

“வெறும் பெயர் வைத்துக்கொண்டால் முஸ்லீம் ஆகிவிட முடியுமா?”

“சார்… புரியலையே..?”

“சொல்கிறேன். உங்கள் பெயர் யாசர். இதை யார் கேட்டாலும் உங்களை ஒரு முஸ்லீம் என்றுதான் சொல்வார்கள். ஆனால், நீங்கள் உண்மையான முஸ்லீமா? இல்லையே. உங்களை வந்ததிலிருந்தே நான் கவனித்துக்கொண்டுத்தான் இருக்கிறேன். ஒரு முறைகூட உங்களை தொழுது நான் பார்த்ததில்லை. பாங்கு சொல்லியும் நீங்கள் பள்ளி வாசலுக்குப் போகாமல் லேப் டாப்பில் கம்ப்யூட்டர் கேம் விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள். ஓர் உண்மையான முஸ்லீம் முதலில் ஐந்து கடமைகளையும் நிறைவேற்றுபவனாக இருக்க வேண்டும். புனித ஹஜ் கடமையை நேரம் வரும்போது நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால், தினமும் ஐவேளை தொழுகை என்பது ஒவ்வொரு முஸ்லீம் மீதும் கட்டாயக் கடமையாக்கப்பட்டிருக்கிறது. கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐந்து கடமைகள்தான் உங்களை மற்ற மதத்தினரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இவற்றில் ஒன்றுகூட கடைப் பிடிக்காத நீங்க எப்படி உங்களை ஒரு முஸ்லீமாகச் சொல்லிக்கொள்ளலாம்? என்னைப் பாருங்க. நான் ஓர் இந்து. கோவிலுக்கு தவறாமல் போகிறேன். அதே போன்று என் நண்பர் ஷஹாபுத்தீன் என்னுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாலும் பாங்கு ஒலி பள்ளி வாசலிலிருந்து ஒலித்ததும், பேச்சை நிறுத்திவிட்டு எழுந்து தொழுதுவிட்டு வந்துதான் பேச்சைத் தொடர்வார். அவரவர் மதப்படி கடமைகளை தவறாமல் கடைப் பிடிக்கணும் தம்பி. இறையச்சம் உள்ள மனிதன்தான் உண்மையான மனிதன்.”

‘சுரீ’ரென சுட்டன அண்ணாமலையின் உண்மையான வார்த்தைகள். அவருடைய அறிவுரை அவனுடைய அறிவுக்கண்ணைத் திறக்கச் செய்தது. வெட்கித் தலை குனிந்தவன், உறுதியுடன் நிமிர்ந்தான்.

“என்னை மன்னிச்சிருங்க சார். இத்தனை நாளும் என் வாப்பாவை ஏமாத்திக்கிட் டிருந்தேன். ஆனா, நீங்க இவ்வளவு உரிமையோடு என்னைக் கண்டிக்கிற விதத்தில் நல்ல அறிவுரையை வழங்கி இருக்கீங்க. இன்ஷா அல்லாஹ், இனி நானும் ஓர் உண்மையான முஸ்லீம்தான் என்பதை நிரூபித்துக் காட்டறேன்.” என்றான்.

அவனுடைய உறுதியைக் கண்டு மகிழ்ந்துபோனார் அண்ணாமலை.

“நானே சொல்லலாம்னு இருந்தேன். நீ முந்திக்கிட்டே.” என்று அண்ணா மலையைப் பார்த்துச் சொன்னார் ஷஹாபுத்தீன்.

யாசர் திருந்திவிடுவான் என்கிற நம்பிக்கை துளிர்விட்டது இருவர் மனதிலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *