சிறுகதை

இறுதி வாதம்!- ஓம்குமார்

அன்று நீதிமன்ற வளாகத்தில் என்றுமில்லாத அளவுக்கு பொதுமக்கள் கூடியிருந்தனர்.

பத்திரிகை நிருபர்கள் மற்ற ஊடகத்தைச் சார்ந்தவர்கள் ஒரு புறம்; குற்றவாளி கூண்டில் நிற்கும் மருத்துவர் பூவரசனின் குழாமைச் சேர்ந்தவர்கள் மறுபுறம்; மருத்துவம் படிக்கும் மாணவர்கள் என்று பல தரப்பினரும் கூடியிருந்தனர்.

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள் பூவரசனின் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சேர்க்கப்பட்ட சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

மருத்துவமனையின் சரியான சிகிச்சை, சரியான நேரத்தில் கிடைக்காததால்தான் மரணம் ஏற்பட்டது என்பது இறந்தவரின் உற்றார் உறவினர்களின் வாதம். மருத்துவர்களின் அறிக்கைகள் தெளிவாக இருந்தபோதும் அவற்றை இறந்தவரின் குடும்பத்தினர் ஏற்காத நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று இறுதி நிலைக்கு வந்துள்ளது. இறுதி வாதங்கள் முடிந்தபின் நீங்கள் ஏதாவது கூற விரும்பினால் கூறலாம் என்றார் நீதிபதி.

“உயிரை கொடுப்பதும் எடுப்பதுவும் நம் கையில் இல்லை. அது ஆண்டவன் கையில் பிழைக்கமாட்டார் என்று நினைத்த பலர் உயிர் பிழைத்து நம்மை ஆச்சரியப்படுத்தி உள்ளனர். தான் சுமந்த கருவைக் குழந்தையாக்கி சுமந்து பின் அதைப் பெற்றெடுக்கையில் குழந்தை இறந்து பிறந்தாலோ, இல்லை பிறந்து இறந்தாலோ அதில் தாயின் தவறென்ன?

எந்தத் தாய்க்கும் அந்த எண்ணம் இருக்க முடியாது.

சட்டம் மட்டும் தெரிந்த நீங்கள் மருத்துவம் பயின்ற இருவருடன் சேர்ந்து ஆராய்ந்து வழக்கின் தீர்ப்பு கூறவேண்டும். வழக்குகளை வருடக்கணக்கில் ஆராய்ந்து , தேவையான அனைத்துச் சாட்சிகளையும் தீர விசாரித்து அளிக்கும் தீர்ப்பு, சில சமயங்களில் மேல் விசாரணையில் மாறிப்போவதுண்டு. ஆனால் எங்களுக்கு அதைப்போன்ற அவகாசங்களோ, தேவைப்படும் விளக்கங்களோ பல சமயங்களில் கிடைப்பதில்லை: அந்த நேரத்தில் நோயாளியின் நிலையறிந்து, அந்த உயிரைக் காப்பாற்ற எதைச் செய்யவேண்டும் என்று நாங்கள் படித்த மருத்துவ அறிவு சொல்கிறதோ அதைத்தான் எந்த மருத்துவரும் செய்வார். ஆனால் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மருத்துவர் மீது பழி கூறுவது தவறான முன் உதாரணம் ஆகிவிடாதா ? தங்கள் உயிரை பணயம் வைத்துப் பிற உயிர்களை காப்பாற்ற தாங்கள் படித்த படிப்பைக்கொண்டு முழு முயற்சி கொண்டு உழைக்கிறார்கள் மருத்துவர்கள். அதை சரி என்றோ தவறு என்றோ பல நாட்கள் பலரை கேட்டு ஆராயும் அவகாசம் உங்களுக்கு உள்ளது. ஆனால் ஆம்புலன்ஸில் மயக்கத்திலோ, ஒழுகும் இரத்த காயங்களுடனோ கொண்டுவரப்படும் நோயாளியிடம் நாங்கள் என்ன கேட்கமுடியும்?” என்று தன் தரப்பிற்கான கருத்துகளை எடுத்துரைத்தார் பூவரசன்.

மொத்த நீதிமன்ற வளாகமே அமைதியில் அவரது கருத்தான வார்த்தைகளால் உறைந்து போயிருந்தது.

பின்பு தன் தீர்ப்பைச் சொல்ல ஆரம்பித்த நீதிபதி கூறினார்,

“ஒருவருக்கு மருத்துவ உதவியை நாடும்போது அவரைப் பரிசோதிக்கும் மருத்தவர் ஒருவராலே அவரது உடல்நிலை அதற்கேற்ற சிகிச்சையை நிர்ணயிக்க முடியும். அவரது சிகிச்சையில் குற்றம் காண்பது என்பது அறியாமையே!

பூவரசனின் இந்த வழக்கின் தீர்ப்பை மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவிடம் தந்து அவர்கள் விசாரித்து அவர்களால் தரப்படும் கருத்தின் அடிப்படையில் என் தீர்ப்பை வழங்கலாம் என்று நான் நினைத்திருந்தேன், ஆனால் அவர்கள்கூட அந்த அவசர நிலையில் என்ன சிகிச்சை அளித்திருக்க வேண்டும் என்று விளக்க முடியாது!

அதனால் மருத்துவர் பூவரசனின் கருத்துகளைக் கேட்டு அவற்றிலுள்ள உண்மையை உணர்ந்து ஏற்று நான் என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்!

நாம் மருத்துவர் மேலுள்ள நம்பிக்கை குறைந்து அவரின் செயலில் தவறு கண்டுபிடிப்பது என்பது, தினம் வணங்கியும் எனக்கு வரம் ஏன் அளிக்கவில்லை என்று இறைவனை நிந்திப்பதற்கு சமம் என்பதே என் தீர்ப்பு!” என்று வழக்கை முடித்துவைத்தார் நீதிபதி.

மருத்துவர்களை இறைவனுக்கு நிகராக ஒப்பிட்ட நீதிபதியின் தீர்ப்பு அங்கிருந்த அனைவரையும் சிந்திக்க வைத்தது!

Leave a Reply

Your email address will not be published.