செய்திகள்

இறால் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்: மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

சென்னை, பிப்.13-

உலகில் இறால் ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மோடி பற்றிய தமிழ்ப் பதிப்பு புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:-

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் ரூ.15 தான் பயனாளிக்கு கிடைக்கிறது என்று சொன்னார். ஆனால் இன்று டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நடைமுறைப்படுத்தி, ஜன்தன் கணக்கு தொடங்கி, பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிகள் மூலம் திட்டங்களை பூர்த்தி செய்கிறோம். இந்த பெருமை பிரதமர் மோடியையே சாரும்.

அந்தவகையில் விவசாயிகளுக்கும் நேரடியாக திட்டங்கள் சென்றடைகின்றன. இதன் மூலம் ரூ.2 லட்சம் கோடி வரிப்பணம் மிச்சப்படுத்தப்பட்டு, வளர்ச்சித் திட்டங்களுக்கு அதை பயன்படுத்தி வருகிறோம். இது 8 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம். இன்று ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் வசதியுடன், கழிவறை வசதியும் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ் இன்று உலகம் முழுவதும் நம்முடைய பொருட்கள் சென்று கொண்டிருக்கின்றன. உதாரணமாக மீன்வளத்துறையில் உலக அளவில் இறால் ஏற்றுமதியில் முதலிடத்தில் இந்தியா இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் ‘ஸ்டார்ட் அப்’ கம்பெனிகள் நிறுவுதலில் உலகத்திலேயே 3வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இதற்கு பிரதமர்தான் காரணம்.

இன்றும் சீனா மற்றும் தெற்காசிய நாடுகளில் முககவசம் அணிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அந்த நிலை இல்லை. அதற்கு நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியே காரணம். பிரதமர் மோடிதான் அதை கொடுத்தார். நம்முடைய தேவைகளுக்கு போக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தோம்.

அடுத்த 25 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டை நாம் இப்போது கொடுத்திருக்கிறோம். வருகிற 2047ம் ஆண்டில் நம் நாடு மிகப்பெரிய வல்லரசாகவும், உலகத்துக்கு வழிகாட்டியாகவும் இருக்கும். அது பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் இன்றைய இளைஞர்கள் கையில் இருக்கிறது. அனைவரின் வளர்ச்சிக்கு, அனைவரும் சேர்ந்து பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *