செய்திகள்

இறந்த மனைவிக்கு மெழுகுசிலை: புதுமனை புகு விழாவில் நெகிழ வைத்த கணவன்

* தத்ரூபமான சிலை: உறவினர்கள் வியப்பு

* பக்கத்தில் உட்கார்ந்து படமெடுத்தது குடும்பம்

பெங்களூரு, ஆக. 11-–

விபத்து ஒன்றில் உயிரிழந்த தனது மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து, அந்த சிலையுடன் கணவர் புதுமனை புகுவிழா கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் மனைவிக்கு ஆக்ராவில் பளிங்குக் கற்களால் ‘தாஜ்மகால்’ நினைவு மண்டபம் எழுப்பினான் ஷாஜகான். இது கடந்தகால வரலாறு. இதேபோல தன் காதல் மனைவிக்கு மெழுகுச்சிலை உருவாக்கி இருப்பது நிகழ்காலம், சம்பவம்.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஸ்ரீநிவாஸ் குப்தா. இவரின் மனைவி சத்யாமணி. சமீபத்தில் ஒரு விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்துவிட்டார்.

இதற்கிடையே ஸ்ரீநிவாஸ், வீடு ஒன்றைக் கட்டி வந்தார். இதே வீட்டில் தனது மனைவி சத்யாமணியோடு வாழ வேண்டும் என ஆசைப்பட்டு வந்தார். ஆனால், இதற்கிடையே மனைவி உயிரிழந்தார். இதனால் மன வேதனையடைந்தார்.

புதுமனை புகுவிழா நடக்கும்போது தனது மனைவி சத்யாமணி அங்கு இருக்க வேண்டும். தன்னோடு இருப்பதாக உணர்வு இருக்க வேண்டும்’ என விரும்பிய ஸ்ரீநிவாஸ், மனைவிக்கு மெழுகு சிலை ஒன்றை உருவாக்கினார். அதை அந்தப் புது வீட்டின் சோபாவில் அமைத்தார். அந்த சிலை கைதேர்ந்த வல்லுநர்களால் உருவாக்கப்பட்டது. நிஜத்தில் பார்ப்பதைப் போலவே சிலையும் அப்படியே தத்ரூபமாக இருந்தது.

புதுவீட்டிற்கு வந்த உறவினர்கள், விருந்தினர்கள் அனைவரும் சத்யாமணியின் சிலையை பார்த்து வியந்து ரசிக்கத் தொடங்கினர். மகள்கள் 2 பேர் கணவரும், சத்யாமணி சிலையோடு அமர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் இப்போது வைரலாகி இருக்கிறது.

ஸ்ரீநிவாஸ் தனது மனைவியின் மீது வைத்திருந்த காதல், இந்த மெழுகு சிலையின் மூலம் பிறருக்குத் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *