செய்திகள்

இறந்தாக ராணுவம் அறிவித்த வீரர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு உயிரோடு வந்தார் : மனைவி, குடும்பம் அதிர்ச்சி

Makkal Kural Official

சண்டிகர், ஏப் 17–

இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட ராணுவ வீரர் ஒருவர், 16 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்த நிகழ்வு குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹிமாச்சல பிரதேசம் கங்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரீந்தர் சிங். இவர் 16 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நிலையில், ராணுவம் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து, அவரது மனைவி விதவை ஓய்வூதியப் பணத்தை பெற்று வந்தார்.

இந்நிலையில், 16 ஆண்டுகள் கழித்து இப்போது பதன்கோட் நீதிமன்றத்தில் சுரீந்தர் சிங் ஆஜராகியிருப்பது அதிகாரிகளையும், குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.

மனைவி மீனா குமாரி தொடர்ந்த வரதட்சணை கொடுமை வழக்கிற்கு பயந்தே இத்தனை ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்தது தெரிய வந்தது. ராணுவத்தால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதால், தன்னுடைய அடையாளத்தை மீட்டெடுக்க விரும்பிய சுரீந்தர் சிங், நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அப்போது தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

2009ம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் பழைய நினைவுகளை இழந்து விட்டதாகக் கூறிய அவர், சமீபத்தில் தான் நினைவு திரும்பியதாகவும் சுரீந்தர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டே தான் பணியாற்றிய ராணுவ பிரிவினரிடம் சரணடைந்து விடலாம் என்று முயற்சித்துள்ளார். ஆனால், கோவிட் வைரஸ் தொற்று பரவலால் அது நடக்காமல் போய் விட்டதாக சுரீந்தர் கூறியுள்ளார்.

‘‘மிகவும் மன அழுத்தத்தில் நான் இருந்தேன். என் மனைவி எனது மீதும், குடும்பத்தினர் மீதும் வரதட்சணை கொடுமை புகார் அளித்திருந்தார். என்னுடைய வேலையை அவமதித்ததுடன், மோசமாக நடத்தினார். எனவே, வேறு வழியில்லாமல் இங்கிருந்து சென்று விட்டேன். குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களில் ரெயில் நிலையங்கள், குடிசை பகுதிகளில் பல ஆண்டுகள் தங்கியிருந்தேன். வீட்டுக்கு திரும்பி செல்லலாம் என்று ஒவ்வொரு முறையும் தோன்றும் போதெல்லாம், மனைவியின் வரதட்சணை கொடுமை புகார் அதனை தடுத்து விட்டது’’ என்று அவர் வேதனையோடு கூறினார்.

இது தொடர்பாக, ராணுவ உயரதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், ஜாமினில் வெளியே வந்து காங்ராவில் தன்னுடைய சகோதரனுடன் வசித்து வருகிறார் சுரீந்தர்சிங்.

வரதட்சணை கொடுமை வழக்கை விரைந்து முடிக்க 23ம் தேதி முதல் தினமும் விசாரணை நடத்த பதன்கோட் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *