2 நாட்களாக மீட்பு பணிக்கு வராததால் ஆத்திரம்
பேச்சுவார்த்தைக்கு வந்த அமைச்சர் பொன்முடி, அதிகாரிகள் மீது சேற்றை வீசி விரட்டியடிப்பு
விழுப்புரம், டிச. 3–
பெஞ்ஜல் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து 2 நாட்கள் ஆகியும் மீட்பு பணிகளுக்கு அதிகாரிகள் வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தைக்குச் சென்ற அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகள் மீது போராட்டக்காரர்கள் சேற்றை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான பெஞ்ஜல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதாவது பெஞ்ஜல் புயல் கரையைக் கடந்த போது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ வேகத்தைத் தொட்டது. இதனால் சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் கடுமையாகச் சேதமடைந்தன.
பெஞ்ஜல் புயலால் வரலாறு காணாத மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புயல் கரையை கடந்து இரண்டு நாட்களாகியும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் வடியவில்லை. இதனால் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சாலையின் இரண்டு பக்கத்திலும் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நீண்ட நேரமானதால் அந்த வாகனங்களில் இருந்த பயணிகள் கடுமையான அவதி அடைந்தனர்.
சேற்றை வீசி விரட்டியடிப்பு
இதனையடுத்து போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பொன்முடி அங்குச் சென்றார். அப்போது அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அவர்மீது சேற்றை வாரி வீசினர். அவருடன் ஆய்வுக்கு சென்ற அவரது மகன் கௌதம சிகாமணி மற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் மீதும் சேற்றை வீசியதால் அவர்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.