சிறுகதை

இருமல்- மலர்மதி

தோழியைப் பார்த்துவிட்டுத் திரும்பிய அனன்யா அந்த ஆள் அரவமற்ற சாலையில் தனியாக நடந்து சென்றுக் கொண்டிருந்தாள்.

சாலையோரம் அரட்டை அடித்துக்கொண்டிருந்த அந்த நால்வரின் காமப் பார்வையில் எக்குத்தப்பாய்ச் சிக்கினாள்.

“மச்சி… செம ஃபிகருடா!” என்றான் ஒருவன்.

“என்ன சொல்றே?” என்று கேட்டுக்கொண்டே திரும்பிப் பார்த்தான் இன்னொருவன்.

“வேறென்ன சொல்ல? வழக்கம்போல் விருந்துதான்!”

பைக்குகளை எடுத்துக்கொண்டு அவளை வட்டமடித்தனர்.

மிரண்டு போனாள்.

துணைக்கு யாரையாவது அழைத்து வந்திருக்க வேண்டுமோ?

இந்த பொறுக்கிப் பயல்களிடமிருந்து தன்னைக் காப்பாற்ற இங்கே இப்போதைக்கு ஒரு ஈ, காக்கையும் காணோமே?

முதல் முறையாக பீதி கிளம்பி உலுக்கியது அனன்யாவுக்கு.

கண்ணிமைக்கும் நேரத்தில்…

அவளை ‘அலேக்’காகத் தூக்கிக்கொண்டு அருகிலிருந்த சவுக்குத் தோப்புக்குள் நுழைந்தனர்.

“தயவு செஞ்சு என்னை விட்ருங்க. ப்ளீஸ்… என்னை ஒண்ணும் பண்ணி டாதீங்க…” – கெஞ்சினாள்.

இப்போது கெஞ்சி என்ன பயன்?

அவர்களில் ஒருவன் அவளை நெருங்கினான்.

திடீரென்று –

வழக்கமாய் பயமோ, பீதியோ ஏற்படும்போது உண்டாகும் தொடர் இருமல் உண்டாயிற்று அனன்யாவுக்கு.

“லொக்கு… லொக்கு… லொக்கு…” – அடக்கமுடியாமல் தொடர்ந்து இருமினாள்.

“டேய்… இவளுக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருக்குடா…” என்று ஒருவன் கத்த, அவர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து மறைந்து போனார்கள்.

நிம்மதியுடன் எழுந்து வேகமாய் நடக்க ஆரம்பித்தாள் அவள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *