செய்திகள்

இருமல் மருந்து விவகாரம்; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Makkal Kural Official

சென்னை, அக். 9–

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த மருந்தின் தரத்தை 2 ஆண்டுகளாக ஆய்வு செய்யாத 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தில் நச்சுத்தன்மை அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 1-ந்தேதி மத்திய பிரதேசத்தில் இந்த மருந்தை சாப்பிட்ட 20 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் அம்மாநில அரசு தமிழ்நாட்டிற்கு தகவல் தெரிவித்தார்கள்.தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்து இந்த இருமல் மருந்தில் நச்சுத்தன்மை இருப்பதை கண்டுபிடித்தது. இது பற்றி உடனே மத்திய பிரதேச அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஒடிசா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கும் தகவல் தெரிவித்தோம்.ஆனால் மத்திய பிரதேச அரசும், மத்திய அரசும் இந்த மருந்தில் தவறு இல்லை என்று கூறி அலட்சியமாக இருந்து விட்டனர். நாம்தான் இந்த இருமல் மருந்தில் நச்சுத்தன்மை எந்த அளவு கலந்து உள்ளது என்பதை உறுதிபடுத்தி விட்டு உடனே 3-ந்தேதியில் இருந்து அந்த மருந்தை இனி கடைகளில் விற்க கூடாது என்று உத்தரவிட்டோம்.

அதுமட்டுமின்றி அந்த தொழிற்சாலையில் இருமல் மருந்தை தயாரிக்க தடை விதித்தோம். இது குறித்து விளக்கம் தருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த நோட்டீசை வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலையில் நோட்டீசை தொழிற்சாலையில் ஒட்டி விட்டு வந்து உள்ளனர்.இந்த நிலையில் அந்த உரிமையாளர் நேற்றிரவு கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

அதுமட்டுமின்றி கம்பெனிக்கு அவரை அழைத்து சென்று தாசில்தார் விசாரணை நடத்தவும் உள்ளனர். அவரது பதிலுக்கு பிறகு நிரந்தரமாக கம்பெனியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.அடுத்த கட்டமாக அந்த கம்பெனியின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வதற்கும் கம்பெனியை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நிலையில் 2 சீனியர் மருந்து தர ஆய்வாளர்கள் கடந்த 2 ஆண்டுகளாக மருந்து தரத்தை ஏன் ஆய்வு செய்யவில்லை என்கிற வகையில் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு கூறி உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *