ராமாயணம், மகாபாரத நூல்களை அரபு மொழியில் வெளியிட்டார்
குவைத் சிட்டி, டிச. 22–
43 ஆண்டுகளுக்கு பிறகு குவைத் வந்து இருப்பது பழமையான நட்பை வலுப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளாார்.
குவைத் மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்றுள்ளார்.
இதையடுத்து, குவைத் மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் உறவை வலுப்படுத்துவது மற்றும் வர்த்தக உறவு குறித்து ஆலோசித்தனர்.
குவைத் மன்னரை சந்தித்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். ‘அரேபிய வளைகுடா கோப்பையின் துவக்க விழாவின் போது, குவைத்தின் மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவை சந்தித்தது மகிழ்ச்சி’ என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
குவைத்துக்கு சென்ற பிரதமருக்கு விமான நிலையத்தில் அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குவைத் சிட்டியில் உள்ள விடுதிக்கு வந்த பிரதமர் மோடிக்கு, இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்து, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அப்போது, ராமாயணம் மற்றும் மகாபாரத நூல்களை அரபு மொழியில் பிரதமர் மோடி வெளியிட்டார். அரபு மொழியில் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை மொழிபெயர்த்தவர்களை பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டினார்.
தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்ட அவர், குவைத்தில் உள்ள இந்தியர்களைப் பார்க்கும்போது, மினி இந்தியாவுக்கு வந்ததுபோல் உணர்வதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, குவைத் சிட்டியில் கல்ப் ஸ்பிக் தொழிலாளர் முகாமில் இந்தியர்களை சந்தித்து உரையாடிய பின், அவர்களுடன் உணவு அருந்தினார்.
தொடர்ந்து அல் அப்துல்லா உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் இருந்து குவைத் வருவதற்கு 4 மணி நேரமே என்றாலும், ஒரு இந்திய பிரதமராக குவைத் வருவதற்கு 40 ஆண்டுகள் தேவைப்பட்டிருப்பதாக கூறினார். குவைத் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா எப்போதும் துணைநிற்கும் என்றும் உறுதியளித்த பிரதமர் மோடி, குவைத் வளர்ச்சிக்கு தேவையான மனிதவளமும், திறனும் தொழில்நுட்பமும் இந்தியாவிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.