ராணிப்பேட்டை, ஜன.23–
மக்களைத் தேடி மருத்துவத்தின் கீழ் பயனடைந்த ராணிப்பேட்டை மாவட்ட பயனாளிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
நிறைந்தது மனம் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயனடைந்து வரும் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று திட்டத்தின் செயல்பாடு முழுமையாக பெற்று பயனடைந்து வருகின்றார்களா ? என்பதை ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுநாள் வரையில் 3,12,544 நபர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்ட மருத்துவ குழுவினர் 61 பொதுமக்களுக்கு கேன்சர் நோய் பரிசோதனை மூலம் கண்டறிந்து தொடர் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா நெமிலி வட்டம் கீழ்வீதி காலனி பஜனை கோவில் தெருவில் வசித்து வரும் படவேட்டம்மாள் (வயது 58) என்கிற பெண்மணி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் வீட்டிற்கே மருத்துவ குழு வருகை தந்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சிகிச்சை அளித்து பயன்பெற்று உடல்நிலை தேறி வருவதையும், அதேபோன்று, மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் பவானி (வயது 54) என்கிற பெண்மணி தொற்றா நோய் சர்க்கரை ரத்த கொதிப்பு நோய்க்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மருத்துவ குழு வீட்டிற்கே வருகை தந்து சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகளை வழங்கி வருவதால் கிடைக்கப்பெற்ற பயன் குறித்தும் நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக நேரில் சந்தித்து திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்து செய்தியாளர்களுக்கு விவரித்தார்கள்.
இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வரும் பயனாளிகள் தெரிவித்தாவது:-
நெமிலி வட்டம் கீழ்வீதி காலனி பஜனை கோவில் தெருவில் வசித்து வரும் படவேட்டம்மாள் திருநாவுக்கரசு (வயது 58) என்பவர், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மருத்துவ குழுவினர் நேரடியாக வீட்டிற்கு வந்து நோயாளியை கண்டறிந்து அவருக்கு உரிய மருந்து மாத்திரைகள் மற்றும் உடற்பயிற்சி, பிசியோதெரபிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை கொடுத்து தற்பொழுது படுத்த படுக்கையாக இருந்த பெண்மணி அங்கு மருத்துவரின் ஆலோசனைப்படி ஏற்படுத்தப்பட்டுள்ள சிறிய கட்டமைப்பை கொண்டு நாள்தோறும் உடற்பயிற்சி செய்து தானே எழுந்து நடந்து நிற்கும் அளவிற்கு இத்திட்டத்தின் மூலம் அப்பெண்மணி பயனடைந்து வருகிறார். அவரை கலெக்டர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த திட்டத்தில் மூலம் பயனடைந்த படவேட்டம்மாள் கூறுகையில், இந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இதனை தொடர்ந்து மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் பவானி பரந்தாமன் (வயது 54) தெரிவித்ததாவது: – இந்த திட்டத்தின் மூலம் நாங்கள் நல்ல முறையில் பயன் அடைந்து வருகிறோம். இந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். இந்நிழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் மேகலா, பிசியோதெரபிஸ்ட் செல்வி. பூர்ணிமா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.