செய்திகள்

2 டோஸ் தடுப்பூசி போட்டும் டெல்டா பிளஸ் கொரோனா: இந்தியாவில் பலியான முதல் பெண்

மும்பை, ஆக. 13–

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டும் கூட, டெல்டா பிளஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மும்பை பெண்ணின் உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா 2 வது அலையில் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரசால் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 63 வயதுடைய பெண்மணி முதன் முதலாக உயிரிழந்துள்ளார். கடந்த 27 தேதி அவர் உயிரிழந்தது, டெல்டா பிளஸ் கொரோனா வைரசினால்தான் என்பதை மும்பை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பெண்மணி 2 டோஸ் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்ட பின்னர் எங்கும் பயணம் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. டெல்டா பிளஸ் வைரஸ் தாக்குவதற்கு முன்பே அவர் நோய்வாய்ப்பட்டு இருந்திருக்கிறார். அந்தப் பெண்மணிக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்ததால், சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றபோது கடந்த ஜூலை மாதம் 21ந் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உறுதியான டெல்டா பிளஸ்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் ஜூலை 27ந் தேதி உயிரிழந்திருக்கிறார். உயிரிழந்த பின்னர் அவரது மரபணு வரிசையை மும்பை மாநகராட்சி ஆய்வு செய்துள்ளது. அதில் டெல்டா பிளஸ் வைரஸ்தான் இவரது மரணத்திற்கு காரணம் என்பது தெரிய வந்திருக்கிறது.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் ஆறு பேருக்கும் பரிசோதனை செய்ததில் அந்தப் பெண்மணியின் குடும்பத்தினர் ஆறு பேரில் 2 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதித்திருப்பது தெரிய வந்துள்ளது. மீதி நான்கு பேருக்கான பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

டெல்டா பிளஸ் வகை கொரோனா கவலையளிக்கும் ஒரு வகை என்று இந்திய அரசு ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *