சிறுகதை

இரண்டில் ஒன்று- ஆவடி ரமேஷ்குமார்

காலை மணி 9.15.

” யாரைம்மா செலக்ட் பண்ணியிருக்கிறே… தினேஷா? திவாகரா?”

தன் மகள் அருணாவிடம் கேட்டாள் லட்சுமி.

” செலக்‌ஷன் முடிஞ்சிடுச்சு.இன்னிக்கு ஈவ்னிங் ரிசல்ட்டை சொல்லிடறேன்மா”

” ஓ.கே” என்ற லட்சுமி அலுவலகத்துக்கு புறப்பட்டு போனாள்.

லட்சுமியின் கணவர் சுந்தரம் இறந்து வருடம் இரண்டாகிவிட்டது. அருணாவிற்கு இப்போது அப்பாவும் அவளே தான்.

அருணாவின் திருமண விஷயமாக தரகர் ஒருவரிடம் சொல்லி வைத்திருந்தாள் லட்சுமி.

ஒரே பத்திரிக்கை ஆபீஸில் பணி புரியும் தினேஷ், திவாகர் என்ற இருவரின் ஜாதகங்களை லட்சுமியிடம் கொடுத்திருந்தார் தரகர்.

இரண்டு ஜாதகமும் அருணாவிற்கு அற்புதமாய் பொருந்தியிருந்தது.அதனால் அந்த இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை லட்சுமி அருணாவிடமே விட்டிருந்தாள்.

அருணாவும் டிஜிட்டல் போர்டுகள் தயாரிக்கும் கம்பெனியில் கம்ப்யூட்டர் டிசைனராக வேலை பார்த்து வருகிறாள்.

ஒரு வாரமாகிவிட்டது. அது தான் இன்று ‘ மாப்பிள்ளை யார்’ என்று தெரிந்து கொள்ள அருணாவிடம் கேட்டாள் லட்சுமி.

மாலை.

” அம்மா நான் திவாகரையே கல்யாணம் பண்ணி்க்கிறேன்” என்று முடிவை சொன்னாள் அருணா.

” எதனால என்று நான் தெரிஞ்சுக்கலாமா?” கேட்டாள் லட்சுமி.

” ரெண்டு பேருடைய பொதுவான விவரங்களை வச்சு நான் இந்த முடிவுக்கு வரலை. ரெண்டு பேரோட ஃபேஸ் புக்கை நான் பார்க்க நேர்ந்தது.அதை வச்சுத்தான் திவாகரை தேர்ந்தெடுத்தேன்”

” ஓ.கே. ஃபேஸ்புக்கை வச்சு திவாகர் தான் சிறந்தவர்னு எப்படியம்மா முடிவெடுத்தே?”

” அம்மா..திவாகரோட ஃபேஸ்புக்ல நாட்டு நடப்பு, மக்களின் கட்ட நஷ்டங்கள் பற்றிய செய்திகள் அப் டூ டேட்டா இருக்கு.

புதுசு புதுசா யோசிக்கிற திவாகர், அந்த யோசனைகளை வெளிப்படுத்தி அவருடைய ஃபேஸ்புக் நண்பர்களிடம் கருத்து கேட்கிறார். ஆயிரக்கணக்கானவர்கள் அவருடைய ஆக்கப்பூர்வமான யோசனைகளை மதிச்சு பதில் கருத்து சொல்றாங்க. இன்ட்ரஸ்டிங்!

ஆனா, தினேஷோட ஃபேஸ்புக்கை பார்த்தா நடிகைகளோட கவர்ச்சியான படங்கள் தான் அதிகமாக இருக்கு. ‘ ஏ’ டைப்

வீடியோஸ் நிறைய டவுன்லோடு பண்ணி வச்சிருக்கார். அறிவு பூர்வமான கருத்துக்களோ செய்திகளோ இல்லை. மட்ட ரகமான மீம்ஸ்களை உருவாக்கியும் ஷேர் பண்ணியும் வச்சிருக்கார்….

…இதுல ஆச்சரியம் என்னன்னா ரெண்டு பேருமே ஒரே பத்திரிக்கை ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்க அப்படிங்கிறது தான். திவாகர் ஆக்கப்பூர்வமா

இருக்கார். தினேஷ் எதிர் மறை மனோபாவத்தோடு இருக்கார். நாளை திவாகர் நிச்சயம் ஒரு சிறந்த பத்திரிக்கை ஆசிரியர் ஆவார்னு எனக்கு தோனுது.

நான் ஒரு வருங்கால பத்திரிக்கை ஆசிரியரின் மனைவினு சொல்லிக்கத்தான் ஆசைப்படறேன்ம்மா”

மகளின் புத்திசாலித்தனத்தை எண்ணி

வியந்து சந்தோஷப்பட்டாள் அம்மா லட்சுமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *