சென்னை, மே 11–
இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியை சோவியத் யூனியன் வென்றதன் 80-வது ஆண்டு வெற்றி தினம் நேற்று சென்னை ரஷ்ய இல்லத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியை சோவியத் யூனியன் வென்றதன் 80-வது ஆண்டு வெற்றி விழா, சென்னை ரஷ்ய பண்பாட்டு மையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ரஷ்ய கூட்டமைப்பின் சென்னை தூதர் வலேரி கோட்ஜாயேவ் விளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில், அவருடன் சென்னை ரஷ்ய பண்பாட்டு மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் டோடோனோவ், வெளியுறவு அமைச்சக கிளைச் செயலகத்தின் தலைவர் எஸ். விஜயகுமார் ஐ.எஃப்.எஸ்., இந்தியாவின் ராணுவ பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் “கலர்ஸ் ஆஃப் குளோரி” அறக்கட்டளையின் தலைவர் கேப்டன் டி.பி. ராமச்சந்திரன், சென்னை அகர்சென் கல்லூரியின் தேசிய மாணவர் படை லெப்டினன்ட் அனுப் ஆகியோரும் உடனிருந்தனர்.
ரஷ்யாவில் விழா
இரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவின் 80 வது வெற்றி தின விழாவையொட்டி, மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட வெற்றி அணிவகுப்பு நேரலையில் திரையிடப்பட்டது. ரஷ்யாவின் அதிநவீன ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்ட இந்த அணிவகுப்பை உலகெங்கிலும் இருந்து பல நாட்டு தலைவர்கள் கண்டு வியந்தனர்.
குறிப்பாக, இந்த வரலாற்றுப் பெருவிழாவில், ரஷ்யாவின் தலைவர் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதில் சீனாவின் தலைவர் சீ ஜின்பிங் ஆகியோர் முக்கியத்துவம் பெற்றிருந்தனர். இந்த நிகழ்வுகள் உலகம் முழுவதும் தொலைக்காட்சிகள் மூலம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன, அதேசமயம் இரண்டாம் உலகப் போரின் வீரர்களின் வீரச்செயல்களை நினைவூட்டும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
நினைவுப் பூங்கா
சென்னையில் நடந்த இந்த விழாவில் தாய்லாந்தின் சென்னை தூதர் ராச்சா அரிபார்க், பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் தலைவர் ஆர். வீரமணி, மக்கள் குரல், டிரினிட்டி மிரர் பத்திரிகைகளின் ஆசிரியர் ஆர். முத்துகுமார், தமிழ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் சோழ நாச்சியார் ராஜசேகர், இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் தலைவர் சிவன் கண்ணன், திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அனைத்து விருந்தினர்களும் ரஷ்ய பாரம்பரிய அடையாளங்களுடன் வரவேற்கப்பட்டனர். வோல்கோகிராட் நகரத்தின் பிரதிநிதி நடாலியா அல்ஷுக் ரஷ்ய தூதருக்கு நினைவுக்கொடியை வழங்கினார். ஸ்டாலின்கிராடைச் சேர்ந்த (வோல்கோகிராட்) கலைஞர்கள் சுசன்னா பெட்ரோசியன் மற்றும் ஃபெர்டினான்ட் வர்தன்யான் ஆகியோர் புகழ்பெற்ற ரஷ்ய பாடல்களைப் பாடினர்.
விழாவின் தொடக்கமாக, கிரெம்ளின் மாளிகையின் “நித்திய சுடரில்” இருந்து கொண்டுவரப்பட்ட தீபச்சுடரால் விளக்கேற்றப்பட்டது. இது இரண்டாம் உலகப் போர் மற்றும் பிற போர்களில் உயிரிழந்த வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்தும் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சியும், இராணுவ முகாம்களில் வழங்கப்படும் உணவு முறையிலான சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன.
முன்னதாக மே 6-ம் தேதி, சென்னை ரஷ்ய தூதரகம் இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 80-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு “நினைவுப் பூங்காவை” திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகவும், இறையாண்மைக்காகவும் போராடிய வீரர்களின் நினைவாக மரக்கன்றுகளை நட்டனர்.
![]()





