சிறுகதை

இயல்வது கரவேல் | துரை.சக்திவேல்

ஆத்திச்சூடி நீதி கதைகள் –3

இயல்வது கரவேல்

(விளக்கம்: செய்வதற்கு இயன்ற தருமத்தை செய்யாமல் இருத்தல் கூடாது!)

 

அந்தியூர் உயர்நிலைப் பள்ளிக்கு புதிய ஆசிரியராக சுந்தரம் நியமிக்கப்பட்டார்.

அந்த பள்ளியில் ஏற்கனவே 10 ஆசிரியர்கள் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் பக்கத்து நகரத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து தினமும் பள்ளிக்கு வந்து சென்றனர்.

சமூக அக்கறை கொண்ட சுந்தரம் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் அதே ஊரில் குடியேறினார்.

அந்தியூரைச் சுற்றி 4 கிராமங்கள் இருந்தன. அந்த கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் அனைவரும் அந்தியூர் பள்ளியில் படித்து வந்தனர்.

அந்தப் பள்ளியில் 10ம் வகுப்பு வரை உள்ளதால் அங்கு படிக்கும் மாணவர்கள் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்க வேண்டும் என்றால் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இதனால் அந்தக் கிராமங்களை சேர்ந்த ஒரு சிலரே வெளியூர் சென்று படித்தனர். பெரும்பாலானவார்கள் 10ம் வகுப்புக்கு மேல் படிக்காமல் வேலைக்கு செல்லத் தொடங்கினர்.

இதை அறிந்த ஆசிரியர் சுந்தரம் மிகவும் வருத்தம் அடைந்தார்.

கல்வித் துறை அதிகாரிகளை சந்தித்து அந்த பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த என்ன செய்ய வேண்டும் என்ற விவரத்தை கேட்டார்.

மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கூடுதல் இட வசதி மற்றும் கட்டிட வசதி தேவை என்றும் அறிவுரை வழங்கினர்.

அந்த ஊரில் உள்ள மக்களிடம் இது பற்றி எடுத்துக் கூறினார் சுந்தரம்.

அந்த பள்ளிக்கூடம் இருக்கும் இடம் ஊர் பெரியவர் சண்முகத்தின் தாத்தாவின் இடம் என்றும் அவர் தான் இந்த பள்ளியை தொடங்க தனது இடத்தை கொடுத்ததும் மட்டுமல்லாமல் அதற்கு தேவையான நிதி உதவி வழங்கியதையும் ஊர் மக்கள் கூறினார்கள்.

அந்தப் பள்ளிக்கூடத்தை சுற்றியுள்ள இடங்கள் சண்முகத்திற்கு உரியது என்றும் அவர் மனசு வைத்தால் தான் இது சாத்தியம் என்றும் எடுத்துக் கூறினர்.

ஊர் பெரியவர் சண்முகத்தை நேரில் சந்தித்து விபரத்தை எடுத்துக் கூறுங்கள் என்று ஆசிரியர் சுந்தரம் ஊர் மக்களிடம் கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

அனைவரும் ஊர் பெரியவர் சண்முகத்தை சந்தித்து விபரத்தை எடுத்துக் கூறலாம் என்று அவரது வீட்டுக்கு சென்றனர்.

4 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்க முடியாமல் பெரியதும் பாதிக்கப்படுகின்றனர். நீங்க மனசு வைத்து கூடுதல் இடம் கொடுத்தால் உயர்நிலைப்பள்ளியாக மாற்றலாம்.

உங்களுக்கு கோடி புண்ணியம் ஐயா என்று கூறினார்.

அவர்கள் கூறியதை கேட்டுக் கொண்டிருந்த சண்முகத்திற்கு கோபம் வந்தது.

யார் வீட்டு சொத்தை யாருக்கு கொடுக்கிறது. ஒரு அடி இடம் கூட கொடுக்கமாட்டேன்.

எங்க தாத்தன் முட்டா பையன். யாரோ அவனை ஏமாத்தி இந்த இடத்தை வாங்கிக்கிட்டு அங்கு பள்ளிக் கூடம் கட்டிக்கிட்டாங்க.

அதையே நான் எப்படி காலி செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.

மரியாதையா அம்முட்டு பசங்களும் இங்கிருந்து போயிடுங்க என்று கோபமாக பேசத் தொடங்கினார் சண்முகம்.

வேறு வழியில்லாமல் ஊர் மக்கள் அமைதியாக அங்கிருந்து புறப்பட்டு சென்று நடந்த விபரத்தை ஆசிரியர் சுந்தரத்திடம் எடுத்துக் கூறினர்.

ஆசிரியர் சுந்தரம் தானே நேரில் சென்று ஊர் பெரியவர் சண்முகத்தை சந்தித்து பேசுவதாக கூறினார்.

இதற்கு எல்லாம் காரணம் ஆசிரியர் சுந்தரம் தான் என்று சண்முகத்திற்கு தெரியவந்தது.

உடனே தனது வேலை ஆட்களை அனுப்பி ஆசிரியர் சுந்தரத்தை எச்சரித்தார் சண்முகம்.

ஆசிரியர் சுந்தரம் மனம் தளரவில்லை.

ஊர் பெரியவர் சண்முகத்தை நேரில் சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றார்.

ஆசிரியரை பார்த்தும் சண்முகத்திற்கு கோபம் வந்தது…

என்ன வாத்தியாரே…. உன் வேலையை பார்த்துக்கிட்டு போகமாட்டியா… வந்தோமா… பாடத்தை நடத்தினோமா… சம்பளத்தை வாங்கினோமா…. பெண்டாட்டி புள்ளைகளோடு சந்தோஷமா இருந்தாமான்னு இருக்கனும்.

அதை விட்டுட்டு ஊருக்கு நல்லது செய்யேறன்னு தேவையில்லாத விஷயத்தில் இறங்கக்கூடாது என்று கோபமாக பேசினார்.

ஆசிரியர் சுந்தரம் அவரை சமாதானம் படுத்தினார்.

ஐயா…. இன்னைக்கு அந்த பள்ளிக்கூடத்திற்கு யார் பெயரை வச்சிருக்காங்க…. உங்க தாத்தா பெயர்.

நீங்க இன்னைக்கு பேசுற மாதிரி அன்னைக்கு உங்க தாத்தாவும் பேசியிருந்தா இந்த மாதிரி பள்ளிக்கூடம் வந்திருக்குமோ.

உங்க தாத்தா செய்த அந்த உதவியில் தான் உங்க கிராமத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் படிக்க முடிஞ்சது.

அவங்க எல்லாரும் உங்களையும் உங்க குடும்பத்தையும் வாழ்த்திக்கிட்டு இருக்காங்க.

சுற்றியுள்ள 4 கிராம மக்களும் உங்க பெயரை சொன்னாலே அவ்வளவு மரியாதை கொடுக்கிறாங்க. இதுக்கு காரணம் உங்க தாத்தா கொடுத்த அந்த இடத்திற்குதான்.

தருமம் செய்வதே பெரிய புண்ணியம். தருமத்திலே சிறந்த தருமம் எதுன்னா… நாலு பேர் படிக்கிறதுக்கு உதவி செய்றது தான்.

உங்களால் எத்தனை ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.

நீங்க இன்னைக்கு செய்ற தருமம் உங்களோட அடுத்த தலைமுறைக்கும் புண்ணியத்தை கொடுக்கும்.

செய்வதற்கு இயன்ற அளவு தருமத்தை செய்யாமல் இருப்பது தவறாகும். உங்களால் முடிந்த அளவு இடத்தை இலவசமாக கொடுங்க.

மீதி இடத்திற்கு ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து பணம் வசூல் செய்து கொடுப்பாங்க. அந்த தொகையை வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஆசிரியர் சுந்தரம் கூறினார்.

அப்போது சண்முகத்தின் குடும்பத்தினரும் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தேவையான இடத்தை கொடுக்கலாம் என்று சண்முத்திடம் கூறினர்.

அவர்கள் கூறியதை கேட்டதும் சண்முகத்தின் மனம் மாறியது.

பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தேவையான இடத்தை தருவதாக சம்மதம் தெரிவித்தார்.

ஆசிரியர் சுந்தரம் அந்த பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

பள்ளியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டன.

அதைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கூடம் தரம் உயரத்தப்பட்டது.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கூடத்தை ஊர் பெரியவர் சண்முகம் திறந்து வைத்தார்.

ஊர் மக்கள் அனைவரும் அவரை பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *