செய்திகள்

இயற்கை வண்ணம் பயன்படுத்தப்பட்ட ஆடைகள், அணிமணிகள், கைவினை, வீட்டு உபயோக பொருள் விற்பனை

சென்னை, பிப். 1–

‘சென்னை நேச்சர் பஜார்’ என்ற பெயரில், 20 மாநிலங்களில் இருந்து, எழும்பூர் கோ–ஆப் டெக்ஸ் கண்காட்சி வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இயற்கை வண்ணத்தால் உருவாக்கப்பட்ட ஆடைகள், அணிமணிகள், கைவினைப்பொருள்கள் விற்பனை 3 ந்தேதி வரை நடைபெறுகிறது.

1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘டஸ்ட்கார்’ என்ற அமைப்பில், 29 மாநிலங்களின் கைவினைக் கலைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்தினர் உற்பத்தி செய்த, இயற்கை வண்ணங்களால் உருவாக்கப்பட்ட ஆடை வகைகள், கை வினைப்பொருள்கள், மரம் மற்றும் மண் பாண்டங்களால் உருவாக்கப்பட்ட சமையலறை களங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள், நாட்டின் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. 7 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை எழும்பூரிலுள்ள கோ–ஆப் டெக்ஸ் கண்காட்சி வளாகத்தில், ‘டாஸ்ட்கர்’ அமைப்பின் சார்பிலான கண்காட்சி கடந்த 26 ந்தேதி தொடங்கியது.

80 காட்சி அரங்குகள்

பிப்ரவரி 3 ந்தேதி வரையில் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில், ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், பீகார், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட 20 மாநிலங்களின் கை வினைக் கலைஞர்களின் 80 காட்சி–விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், வீட்டை அலங்கரிக்கும் பல்வேறு ஓவியப் பொருள்கள், செராமிக்ஸ், பானை வகைகள், டெரக்கோட்டா வேலைப்பாட்டு பொருள்கள், கார்பெட்ஸ், புற்கள் மற்றும் பைபர் பொருள்களால் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப்பொருள்கள், உலோக கைவினைப் பொருள்கள், மர செதுக்கு சிற்பங்கள், நாணல் புற்களால் ஆன கூடை வகைகள் என ஏராளமான கலைப்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், ஆடை வகைகளில், தமிழகத்தின் தருமபுரி மாவட்ட பகுதியைச் சேர்ந்த பொற்கை ஆர்டிசன்ஸ் சார்பில், காய்கறிகள், இலைகளின் இயற்கை வண்ணங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட, சிறுவர்களுக்கான ஆடைகள், குர்தீஸ், சேலை, மேலாடை ரங்கள் உள்ளிட்டவை ரூ. 900 விலை முதல் ரூ.10 ஆயிரம் வரையிலான விலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி, குஜராத், பீகார், தெலுங்கானா மாநில கைவினைக் கலைஞர்களின் பெண்களுக்கான ஆர்கானிக் ஆடை வகைகள் உள்ளிட்டவை, பார்வையாளர்களை கவரும் வண்ணம் உள்ளது.

பெண்களுக்கான அணிகள்

மகாராஷ்டிர மாநிலத்தின் ஜட்டின் ஆர்ட்ஸ் சார்பில், பலவேறு கிரிஸ்டல்களில் உருவாக்கப்பட்ட, பெண்கள் கழுத்தில் அணியும் டாலர்கள், கழுத்து அணிகள் உள்ளிட்ட பல்வேறு அணி வகைகள் ரூ. 500 தொடங்கி 8000 வரையான விலைகளில் உள்ளது. அனைத்தும் கண்ணையும் கருத்தையும் கவரும் விதத்தில் உள்ளது. உத்திரபிரதேசத்தின் மேட் வகைகள் ரூ.3500 தொடங்கி ரூ. 7 ஆயிரம் விலையில் காட்சிப்படுத்தபட்டுள்ளது. இவற்றின் வேலைப்பாடுகளும் உறுதித் தன்னையும் மிகச் சிறப்பாக உள்ளது.

அரியானாவின் செருப்பு வகைகளும், மேற்கு வங்கத்தின் பாய் மற்றும் விரிப்புகள், பைகள், மரத்தால் செய்யப்பட்ட சமையலறை கலங்கள் உள்ளிட்டவையோடு, டெல்லியின் அப்பள வகைகள், கடலை மிட்டாய் வகைகள், பதப்படுத்தப்பட்ட திராட்சை போன்ற ஏராளமான உடல் நலத்துக்கும், நாவின் சுவைக்கும் உகந்த நூற்றுக்கணக்கான உணவு பொருள்கள் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *