சிறுகதை

இயற்கை உணர்வு –மு.வெ. சம்பத்

முகவை பள்ளியில் ஆசிரியரான சுப்ரமணியன் ஓய்வு பெற்று இன்றுடன் இரண்டு வருடம் பூர்த்தியாகிறது.

நாட்களின் ஓட்டம் குறித்து சுப்ரமணியன் மிகவும் கவலையடைத்தார். அவரது கவலை தன் மகளுக்கு இன்னும் திருமணம் குதிராதது தான். அன்று வீட்டிற்கு வந்த ஆசிரியர் கல்யாணசுந்தரம் சுப்ரமணியனிடம் ‘உனது மகளுக்கு காவனூர் பையன் ராஜனைப் பார்க்கலாமே’ என்றார்.

‘நமது பள்ளியில் படித்தவன். பொறியியல் பட்டம் படித்துள்ளான். நல்ல வேலையில் உள்ளான். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நான் அவர்கள் தந்தையைத் தொடர்பு கொண்டு பேசுகிறேன்’ என்றார்.

உடனே சுப்ரமணியன் ‘எனக்கு அந்தப் பையனைத் தெரியும். நீங்கள் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.

கல்யாணசுந்தரம் அவர்களைத் தொடர்பு கொண்டதன் விளைவாக ராஜனின் தந்தை மற்றும் குடும்ப நபர்கள் ஆறு பேர்கள் கல்யாணசுந்தரத்துடன் சுப்ரமணியன் வீட்டில் ஆஜரானார்கள். எல்லோரையும் வரவேற்ற சுப்ரமணியன் தனது மகளை அழைத்து அவர்களைக் காலில் விழுந்து வணங்க வைத்தார். வந்திருந்தவர்கள் சுப்ரமணியன் மகள் ரத்னமாலிகாவின் ஜாதகத்தைப் பெற்றுக் கொண்டு தனது மகனின் ஜாதகத்தைத் தந்து விட்டு கிளம்பும் போது ‘இன்னும் இரண்டு நாட்களில் எங்கள் வீட்டிற்கு வாருங்கள்’ என்றனர்.

இரண்டு நாட்கள் கழித்து, கல்யாணசுந்தரத்துடன் சுப்பிரமணியன் குடும்பத்தினர் காவனூர் சென்றனர்.

ராஜனின் தந்தை இன்முகத்துடன் வந்தவர்களை வரவேற்று நேரடியாகவே திருமணத்தேதி குறித்து விடுங்கள் என்றார்.

‘எனது மகன் உங்கள் பெண்ணைப் பார்த்திருக்கிறானாம். நீங்கள் செய்வதைச் செய்யுங்கள். கொஞ்சமும் திருமணத்தில் ஆடம்பரம் வேண்டாம்’ என்றார். சுப்பிரமணியன் குடும்பம் ஆனந்தத்துடன் வெளியேற சுப்ரமணியன் கல்யாணசுந்தரத்துக்கு மானசீகமாக நன்றி சொன்னார்.

திருமண தேதி நிச்சயக்கப்பட்டதிலிருந்து சுப்ரமணியத்திற்கு நேரமே போதவில்லை. இதற்குள் சுப்பிரமணியனிடம் பயின்ற மாணவர்கள் வந்து வாழ்த்துச் சொல்லி தங்களது பங்களிப்பை அவர் மறுத்தும் கொடுத்து விட்டு திருமணத்திற்கு வந்து உதவி செய்கிறோம் என்று கூறி புறப்பட்டனர்.

திருமண மண்டபமே மண நாளன்று மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடியது. முகூர்த்த நேரம் நெருங்கியதும் நாதஸ்வரம் தன் பங்குக்கு வாத்தியாருடன் பட்டையைக் கிளப்ப ரத்னமாலிகா கழுத்தில் மாங்கல்யம் ஜொலித்தது. வந்திருந்தவர்களுடன் புகைப்பட வைபவம் முடியும் நேரத்தில் மங்கள வாத்தியம் முழங்க காவனுர் கிராமத்து மக்கள் மண்டபத்தில் நுழைந்ததும் மண்டபத்தில் உள்ள அனைவரின் கண்களும் அவர்களையே நோக்கிய வண்ணம் இருந்தது. ராஜன் ஒலி பெருக்கியில் ‘இவர்கள் எங்கள் ஊர் மக்கள். எங்கள் ஊர் வழக்கப்படி திருமணமாண தம்பதிகளை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள்.

நாம் எல்லோரும் எங்கள் கிராமம் சென்று அங்குள்ள சடங்குகளை முடித்து விட்டு திருமணம் மண்டபம் வரலாம்’ என்றான். சுப்பிரமணியன் கல்யாணசுந்தரத்திடம் என்ன சடங்கு எனக் கேட்க போய் பார்க்கலாம் வா என்றார்.

கிராமத்தை அடைந்தவர்கள் பச்சை பசேலென்ற மரம், செடி, கொடிகள், மரங்களில் உள்ள பறவைகளின் இனிய கானம், சிறு சிறு விலங்குகளின் நடமாட்டம் கண்டு மகிழ்வடைந்தனர். தாரை, தப்பட்டை முழக்கம் மற்றும் பல வாத்தியங்கள் முழங்க கிராம மக்கள் எல்லோரையும் ஊர்வலமாக அந்த கிராமத்திலுள்ள விசாலமான மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நன்கு அலங்கரிக்கப்பட்ட அந்த மண்டபத்தில் எல்லோரும் இருக்கையில் அமர்ந்ததும் அங்கு வந்த பஞ்சாயத்துத் தலைவர் எல்லோரையும் வரவேற்று, மணமக்களை வாழ்த்தி விட்டு கிராமத்தின் சம்பிரதாயத்தைக் கூறினார். ‘திருமணத் தம்பதிகள் கிராமத்தில் 20 மரக் கன்றுகளை நட்டு அவற்றை நன்கு பராமரித்து வளர்த்துத் தர வேண்டும்.

கிராமத்திலுள்ள இரு பால் வயோதிகர்கள் பராமரிப்பு பேணி வரும் சேம நல நிதிக்கு ரூபாய் 2000 நன்கொடையாக அளிக்க வேண்டும். மணமான ஒரு வருடத்தினுள் நடைபெறும் அம்மன் விழாவில் கட்டாயம் பங்கு கொண்டு தங்களால் முயன்ற பங்களிப்பை அளிக்க வேண்டும்.

பள்ளிக்கூட பாதுகாப்பு கணக்கில் ரூபாய் 1000 அளிக்க வேண்டும். நன்கு படித்த பெண்களாக இருந்தால் மாணவர், இந்த கிராமத்திலுள்ளவர்களை மணந்தவர்கள் இந்த கிராம முன்னேற்றத்தை மனதில் கொள்ள வேண்டும். இந்தக் கிராமம் கடந்த ஐந்து வருடங்களாக மாநில அரசாங்கத்தால் தன்னிறைவு பெற்ற கிராமம் என்ற விருதையும்.

மத்திய அரசால் மூன்று தடவை தன்னிறைவு பெற்ற கிராமம் என்ற விருதையும் பெற்றுள்ளது’ என்றார்.

மேலும் தலைவர் ‘இந்த உறுதிப் பத்திரத்தில் திருமணத் தம்பதிகள் கையொப்பம் இட வேண்டும்’ எனக் கூறி தந்தார்.

சம்பிரதாய சடங்குகள் மற்றும் மரம் நடு விழா முடிந்ததும் எல்லோரும் மறுபடியும் மண்டபத்திற்குச் சென்று வயிறார சுவையான உணவுகளை உண்டனர்.

உணவுச் சுவையில் மயங்கியவர்கள் அடுத்து புறப்பட ஆயத்தமானார்கள். அப்போது ரத்னமாலிகா ராஜனைப் பார்த்து ‘இயற்கை உணர்வு உள்ளவரைத்தான் மணக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இப்போது அது நிறைவேறியது கண்டு மகிழ்ச்சி’ என வெட்கத்துடன் கூறியவுடன் ஒலிபெருக்கியில் ‘இயற்கை அன்னை தந்தெல்லாம் எல்லோருக்கும் சொந்தமடா’ என்ற பாடல் சீர்காழி கோவிந்தராஜன்அவர் குரலில் ஒலித்தது.

Leave a Reply

Your email address will not be published.