செய்திகள்

இயக்குநர் ரவி ஷங்கர் தூக்கிட்டு தற்கொலை

Makkal Kural Official

சென்னை, ஜூலை 14–

மனோஜ், குணால் நடிப்பில் வெளியான வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ரவி ஷங்கர் நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் திடீர் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

எழுத்தாளரான ரவி ஷங்கர் பாக்யா பத்திரிக்கையில் குதிரை என்ற சிறுகதையை எழுதி தனது பயணத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து சினிமாவில் நுழைந்த இவர், இயக்குநர் பாக்யராஜ், விக்ரமன் போன்றவர்களின் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

இதைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு வெளிவந்த வசந்தமெல்லாம் வசந்தம் திரைப்படத்தை இயக்கினார். இதில், மனோஜ் , குணால், அனிதா ஹாசனந்தானி ஆகியோர் தமிழில் அறிமுகமானார்கள், எம்.என்.நம்பியார் மற்றும் சுகுமாரி ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். சிற்பி இசையமைத்திருந்த இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படம் தெலுங்கில் மஞ்சிவாடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு வேறு எந்த படத்தையும் இயக்காத ரவி சங்கர், சரத்குமார், தேவயாணி நடித்த சூர்யவம்சம் படத்தில் சூப்பர் ஹிட் பாடலான ரோஜாப்பூ சின்ன ரோஜாபூ பாடலை எழுதினார். இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படத்திற்கு பாடல் எழுதினார்.

இந்நிலையில், இயக்குநர் ரவி ஷங்கர் சென்னை கே.கே.நகரில் உள்ள தன் வீட்டின் அறையில் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இவரின் இந்த திடீர் முடிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவருக்கு படவாய்ப்பு சரியாக அமையாததால் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. ரவிசங்கருக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *