ஆர். முத்துக்குமார்
பாகிஸ்தானில் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் கைது செய்யப்படுவது நின்றபாடாக இல்லை! இம்முறை முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
2018ல் பதவி ஏற்ற இம்ரான் 2022 ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் சில மணி நேரத்தில் செபாஸ் ஷெரீப் பிரதமராக பதவி ஏற்றார்.
பதவி இழப்புக்குப் பிறகு இம்ரான் கான் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர் மீது 100–-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் தற்போது காதிர் அறக்கட்டளை வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் பாகிஸ்தான் காவல் துறை தெரிவித்துள்ளது. இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்குச் சொந்தமான காதிர் அறக்கட்டளை மூலம் ரூ.5,000 கோடி ஊழல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் இம்ரான்கானை கைது செய்ய ஊழல் தடுப்பு ஆணையம் மே 1-–ம் தேதி உத்தரவு பிறப்பித்ததாகவும் இதைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கானை பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் மூர்க்கமாக இழுத்துச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. அவரது கைது நடவடிக்கையால் இஸ்லாமாபாத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இம்ரான் கான் மீதான கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ- இன்சாப் (பிடிஐ) நாடு முழுவதும் போராட்டம் நடக்கும் என்று அறிவித்தது. இதனால் நேற்று அங்கு வன்முறை வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கான் ஆதரவாளர்கள், லாகூரில் உள்ள ராணுவ கமாண்டரின் வீட்டு வளாகத்துக்குள்ளும் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தின் வளாகத்துக்குள்ளும் நுழைந்தனர். இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கை தீவிரமாக விசாரித்து விட்டு வழக்குகள் முடிவுக்கு வந்த பிறகு தண்டனை தரப்படுமா? அல்லது அவசர கோலமாக ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுவாரா? என்ற கேள்விகள் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி குழப்பத்தை விளைவித்தும் வருகிறது. பல இடங்களில் இம்ரானின் ஆதரவாளர்கள் வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறார்கள்.
ஜனநாயகம் அந்நாட்டில் திரும்ப மலர நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர் இம்ரான்கானே. ஆனால் அரசியல் சூழ்ச்சியால் அவர் பதவியை விட்டு அகற்றப்பட்டார்.
இன்று கைது செய்யப்பட்டு காவல்துறையின் பாதுகாப்பில் இருக்கிறார்.
நமது அருகாமையில் இதுபோன்ற நிகழ்வு, வரும் நாட்களில் பெரும் தலைவலியாக கூட மாறும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது.
ராணுவத்தின் பிடி இறுகினால் பாகிஸ்தான் அரசியல்வாதிகளால் அவர்களது கட்டளைகளை மீற முடியாது திணறுவார்கள், அல்லவா?