சிம்லா, டிச. 16–
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ள நிலையில், சிமென்ட் விலை குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டதன் எதிரொலியாக, அடுத்த நாளே, பாஜக ஆதரவாளரும், பிரதமர் மோடியின் நண்பருமான அதானி, இமாச்சலில் செயல்பட்டு வந்த தனது இரண்டு சிமென்ட் ஆலைகளையும் மூடுவதாக அறிவித்து உள்ளார்.
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில், பாரதீய ஜனதாவிடம் இருந்த ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி, அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 40 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ‘இமாச்சல பிரதேச புதிய முதலமைச்சராகவும், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராகவும் சுக்விந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டு, மாநில முதலமைச்சராக டிசம்பர் 11ந்தேதி பதவி ஏற்றார். துணை முதலமைச்சராக முகேஷ் அக்னி ஹோத்ரி பதவி ஏற்றார்.
சிமெண்ட் ஆலைகள் மூடல்
முதலமைச்சரான சுக்விந்தர் சிங் பதவி ஏற்றதும், மாநிலத்தின் அதிகரித்து வரும் சிமென்ட் விலை தொடர்பாகவும், அண்டை மாநிலங்களை விட இமாச்சலில் சிமெண்ட் விலை அதிகமாக விற்பனை செய்ய காரணம் என்ன? என்பது குறித்து தொழில் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, சிமென்ட் விலை உயர்வு குறித்து, ஆய்வு நடத்தி, விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.
முதலமைச்சர் சுங்கவிந்தர் சிக்கின் உத்தரவு கடந்த 13ந்தேதி வெளியான நிலையில், பாஜக ஆதரவாளரான அதானி குழுமத்துக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த நாளான 14ந்தேதி, இமாச்சல பிரதேசத்தில் பர்மனா மற்றும் தர்லாகாட் என்ற பகுதிகளில் உள்ள இரண்டு சிமென்ட் ஆலைகளையும் மூடுவதாக அதானி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்கு காரணமாக, அதிக போக்குவரத்து செலவு ஏற்படுவதால், சிமென்ட் ஆலைகளை மேற்கொண்டு நடத்த சாத்தியமில்லை என தெரிவித்து உள்ளது.