சிம்லா, பிப். 28–
இமாசல் பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாகூர் உள்பட பாஜகவின் 15 எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இமாசல பிரதேசத்தில் உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்எல்ஏக்கள் இருந்தும், 25 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜக ஒரு வேட்பாளரை நிறுத்தியது. இதனால், வழக்கம்போல், பாரதீய ஜனதா கட்சி குதிரை பேரம் நடத்தி 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாற வைத்ததுடன், 3 சுயேச்சைகளையும் இழுத்ததால் பாஜக வேட்பாளா் ஹா்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றார்.
15 எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
இது காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ஹிமாசல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் குறித்தும், பாஜக எம்எல்ஏக்களை சட்டப்பேரவையில் கண்ணிய குறைவாக நடத்தியது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநரை சந்தித்து இன்று காலை முறையிட்டிருந்தார்.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தலைவரின் அறையில் அத்துமீறி செயல்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாகூர் உள்பட 15 பாஜக எம்எல்ஏக்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர்.