சிம்லா, நவ. 10–
இமாச்சல் பிரதேச தேர்தலில் பாஜகவுக்கு, காங்கிரஸ் கட்சி கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இமாச்சல் பிரதேசம், குஜராத் ஆகிய இருமாநில சட்டமன்ற தேர்தல் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் என மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ள நிலையில், இம்முறை காங்கிரஸிற்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. ஆனால் கருத்துக்கணிப்பு முடிவுகளும், கள நிலவரமும் வேறுமாதிரியாக வந்த வண்ணம் இருக்கின்றன.
68 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட இமாச்சல் சட்டமன்றத்தில் 35 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியும். கடந்த 2017ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 44, காங்கிரஸ் 21, சுயேட்சைகள் 2, சிபிஎம் 1 என வெற்றி பெற்றனர். வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை பாஜக 48.8 சதவீதம், காங்கிரஸ் 41.7 சதவீதம், சுயேட்சைகள் 6.3 சதவீதம், சிபிஎம் 1.5 சதவீதம், பகுஜன் சமாஜ் 0.5 சதவீதம், நோட்டா 0.9 சதவீதம் என பெற்றனர்.
கடும் போட்டி நிலவும்
இந்நிலையில் 2022 இமாச்சல் சட்டமன்ற தேர்தலை ஒட்டி ஏபிபி – சி ஓட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி,
காங்கிரஸ் 44.2 சதவீத வாக்குகள் பெற்று 29 முதல் 37 தொகுதிகளை பெறும் என்றும் பாஜக 44.8 சதவீத வாக்குகளை பெற்று 31 முதல் 39 தொகுதிகளை வெல்லும் என்றும் ஆம் ஆத்மி 3.3 சதவீத வாக்குகளும் மற்ற கட்சிகள் 7.7 சதவீத வாக்குகளும் பெற்று, அதிகபட்சம் 0 முதல் 3 தொகுதிகள் வரை மட்டுமே பெற வாய்ப்பு என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
இதேபோல் ரிபப்ளிக் – பி மார்க் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, பாஜக 45.2 சதவீத வாக்குகளை பெற்று 37 முதல் 45 தொகுதிகளும் காங்கிரஸ் 40.1 சதவீத வாக்குகளை பெற்று 22 முதல் 28 தொகுதிகளும் ஆம் ஆத்மி 5.1 சதவீத வாக்குகளையும் மற்ற கட்சிகள் 9.5 சதவீத வாக்குகளையும் பெற்று 1 முதல் 4 தொகுதிகள் வரை மட்டும் வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை 8 ந்தேதி நடைபெற்று சரியான தேர்தல் முடிவுகள் வெளியாகும்.